நாட்டில் சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான வரிசை நாளுக்கு நாள் நீளும் நிலையில், இன்றைய தினமும் (21.05.2022) மக்களும், வாகன சாரதிகளும் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிட்டது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் நீண்டநேரம் வரிசைகளில் காத்திருந்தவர்களில் பலர் ஏமாற்றத்தோடு வெறுங்கையுடன் வீடு திரும்பினர். விரக்தியால் மேலும் சிலர், புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதும் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தனர்.
அட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் இன்று (21.05.2022) காலை முதல் வரிசைகளில் காத்திருந்தனர். வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நடவடிக்கையும் ஸ்தம்பித்தது.
சமையல் எரிவாயு விநியோக முகவர்களுக்கு குறிப்பிட்டளவு தொகையே வழங்கப்படுவதால், சமையல் எரிவாயுவை வாங்குவதற்காக வரிசையில் நின்ற அனைவருக்கும் அதனை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. இதனால் முகவர்களுடன் மக்கள் முரண்படும் சம்பவங்களும் பதிவாகின.
எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இந்நிலைமையே காணப்பட்டது. கேள்விக்கேற்ப நிரம்பல் இல்லாததால் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. சில இடங்களில் குறிப்பிட்டளவு எரிபொருளே விநியோகிக்கப்பட்டது. மண்ணெண்ணெய் விநியோகத்திலும் கட்டுப்பாடு காணப்பட்டது.
க.கிஷாந்தன், மலைவாஞ்ஞன்