அட்டனில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளன.
சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்ளும் வகையில் இரவு பகலாக எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையத்திற்கு முன்னால் எரிவாயு சிலிண்டர்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களே காணாமல் போயுள்ளன.
இரவு பகலாக பல நாட்கள் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை இரவு வேளைகளில் பாதுகாப்பதற்கு சிலர் முன்வந்துள்ளனர்.
சிலிண்டர் ஒன்றை பாதுகாப்பதற்கு ஒருவரிடம் இருந்து தலா 50 ரூபாவை குறித்த நபர்கள் அறவிட்டு வந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையிலேயே எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளன.
இதற்கு பொறுப்பு கூறுவதற்கும் யாரும் இல்லாத நிலைமை காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் தமது எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போனமை தொடர்பில் அட்டன் நகர சபை மீது மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தெரிவித்து வரிசையாக வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை அகற்றுமாறு நேற்று முன்தினம் அட்டன் நகர சபை அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
இதனையடுத்தே எரிவாயு சிலிண்டர்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் உரிமையாளர்கள் வருகைதந்த போது, குறித்த சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளன.
க.கிஷாந்தன்