இரத்தினபுரி மாவட்டத்தில், லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் நோயினால் அதிகளவான உயிரிழப்புகள் மற்றும் தொற்றுகள் இந்த வருடம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாண சபை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய கன்னங்கர, மாவட்டத்தில் மொத்தமாக 1,882 லெப்டோஸ்பிரோசிஸ் நோயாளர்கள் மற்றும் 22 இறப்புகள் பதிவாகியுள்ளதைக் குறிப்பிட்டு, நிலைமையின் தீவிரத்தை எடுத்துரைத்துள்ளார் .
இரத்தினபுரி மாவட்டத்தில், இந்த நோயினால், அடையாளம் காணப்பட்ட அதிக ஆபத்துள்ள பிரதேசங்களில் எஹலியகொட, கிரியெல்ல, எலபாத, பெல்மடுல்ல, ஓபநாயக்க, நிவித்திகல, கலவான மற்றும் கல்தொட்ட ஆகியவை அடங்கும்.அத்துடன், ‘எலிக்காய்ச்சல்’ எனப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சிறுநீரகம், இதயம் மற்றும் மூளை போன்ற முக்கிய உறுப்புகளின் செயலிழப்பு உள்ளிட்ட ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கும், இது மரணத்தை விளைவிக்கும் என்று கன்னங்கர எச்சரித்துள்ளார்.
மேலும், நோய்த்தொற்றுகளைத் தடுக்க, பிராந்திய சுகாதார சேவை அலுவலகங்கள் அல்லது பொது சுகாதார ஆய்வாளர்கள் மூலம் கிடைக்கும் பயனுள்ள நோய்த்தடுப்பு சிகிச்சையான டொக்ஸிசைக்ளின் (Doxycycline) ஐ எடுத்துக் கொள்ளுமாறு, பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.