ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்கும் ரணில்!

0
38

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் 120வது ஜன்ன தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியில் தலைவர்களால் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட புரட்சிகர திட்டங்கள் குறித்து நினைவுகூர்ந்தார்.

அவ்வாறான திட்டங்களை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டியதன் அவசியத்தை இதன்போது வலியுறுத்திய அவர்,  ஐக்கிய தேசிய கட்சியின் 80 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவிற்கு வருகைத் தருமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், “ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஜனநாயக சோசலிசக் கட்சியாகும். குறிப்பாக இது குறித்து ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்கள் 1975 ஆம் ஆண்டிலேயே அறிவித்தார். அதற்காக ரணசிங்க பிரேமதாசவும், ஏனைய அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். அது தொடர்பில் முதலில் நான் ஒரு விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

‘சிறிய சொத்து, சிறிய வியாபாரம் அல்லது சிறிய வீட்டைச் சொந்தமாகக் கொண்ட ஒருவரிடம் சுதந்திரமான மற்றும் சுயாதீனமான வாழ்வியல் தன்மை நிலவுகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சி நம்புகிறது.

நாடு முழுவதிலும் உள்ள சொத்துரிமையானது இலட்சக்கணக்கான மக்களுக்கு இடையே பரவலாக்கப்படும் போது, அந்தச் சொத்துரிமையின் மூலம் உருவாகும் அதிகாரமும் மக்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரத்தை தவறான வழியில் செல்வாக்கு செலுத்த பயன்படுத்த முடியாது. அதிகாரத்தையும் சொத்துரிமையையும் அரசாங்கத்தின் முன் அல்லது ஏதேனும் ஒரு சலுகை பெற்ற வர்க்கத்தின் முன் மட்டுமே மையப்படுத்தவோ அல்லது ஒன்றிணைக்கவோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

ஒவ்வொரு நபரும் ஒரு சுதந்திர மனிதனாக வாழ்வதற்கும், தனது குடும்பத்தைப் பராமரிப்பதற்கும், சட்டப்பூர்வ உரிமைகளை உருவாக்கிக் கொள்வதற்கும் அவற்றை அனுபவிப்பதற்கும், தனது திறமைகளை விருப்பப்படி பயன்படுத்துவதற்கும், தனது மதத்தைப் பின்பற்றுவதற்கும், தான் விரும்பும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்குமான சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல்.’

இதனை அடிப்படையாகக் கொண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்கள் 17 ஆண்டு காலப் புரட்சியைத் தொடங்கினார். அவருக்குப் பிறகு ரணசிங்க பிரேமதாச அவர்களும் அதை முன்னோக்கி எடுத்துச் சென்றார். நாட்டின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றியமைத்தனர். நல்லதொரு வாழ்வாதார நிலை உருவானது.

குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், அன்று பாடசாலை சென்றவர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியனாக இருந்தது. 1994 இல் மீண்டும் நாட்டை ஒப்படைக்கும் போது அது 4.1 மில்லியனாக உயர்ந்தது. நாட்டின் மக்கள் தொகை பெரிய அளவில் அதிகரிக்காததால், இன்று அந்த எண்ணிக்கை 3.9 மில்லியனாக உள்ளது. அப்படியானால், 17 ஆண்டுகளில் 1.6 மில்லியன் பேருக்கு இந்த நாட்டில் கல்வியை வழங்க நம்மால் முடிந்தது. இதுவொரு புரட்சி அல்லவா?

குறிப்பாக அன்று 10% வீடுகளுக்கும், 10% தொழிற்சாலைகளுக்கும் மட்டுமே மின்சார வசதி இருந்தது. இன்று 95% பேருக்கு மின்சார வசதி உள்ளது. அன்று 40% வீடுகளுக்கே நிரந்தர கூரையும், சிமெண்ட் சுவர்களும் இருந்தன. நாங்கள் அதையும் மாற்றினோம். ரணசிங்க பிரேமதாச எடுத்த நடவடிக்கைகளால் இன்று 80% பேருக்கு நிரந்தர கூரை மற்றும் சிமெண்ட் சுவர்களைக் கொண்ட வீடுகள் உள்ளன.

இதுவொரு புரட்சி இல்லையா? நாம் என்ன செய்தோம்? பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்தோம். அதேபோல் சாதாரண மக்களின் வாழ்வாதார உயர்த்தினோம். நாட்டின் ஜனநாயகம் மற்றும் பரமாதிபத்தியத்தை உறுதிப்படுத்தினோம்.

ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்கள் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன், அதிகாரம் நாடாளுமன்றத்திடமே இருந்தது. 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 3 ஆம் பிரிவின் மூலம் ஆட்சி அதிகாரம், அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை என்பன மக்கள்  இறைமையாக உள்ளாக்கப்பட்டன.

அதிபர், அதாவது நிறைவேற்று அதிகாரத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நாட்டின் வாக்காளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை உரிமைகள் அனைத்தும் மக்கள் பரமாதிபத்தியத்தில் சேர்க்கப்பட்டன.

அதேபோல் வாக்குரிமையும் மக்கள் பரமாதிபத்தியத்திற்குள் கொண்டுவரப்பட்டது. இவை அனைத்தும் ஜே.ஆர்.ஜெயவர்தன கொண்டு வந்த அந்தச் சிறப்பு அரசியலமைப்பினால் தான் சாத்தியமானது.

மேலும், 83 ஆம் பிரிவின் மூலம் சில சட்டமூலங்களுக்குப் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று 3 ஆம் பிரிவில் சேர்க்கப்பட்டது. பௌத்த மதத்திற்கான 9 ஆம் பிரிவும் சேர்க்கப்பட்டது. அத்துடன் அடிப்படை உரிமைகளுக்கான நீதித்துறை அதிகாரத்தைச் செயல்படுத்த 126 ஆம் பிரிவும் கொண்டு வரப்பட்டது. இதையே புரட்சி என்கிறோம். இதுவே இன்று உங்களுக்கு இருக்கும் உரிமையாகும்.

அன்று நாம் வறுமையிலிருந்து மீண்டது உண்மையிலேயே ஜே.ஆர்.ஜெயவர்தன 17 ஆண்டுகளாக முன்னெடுத்த இந்தச் சீர்திருத்தப் புரட்சியினால்தான். அவரைப் போலவே பிரேமதாச அவர்களும், மகாவலி திட்டத்தை உருவாக்க காமிணி திசாநாயக்க அவர்களும், மஹாபொல உதவித்தொகையை அறிமுகப்படுத்த லலித் அத்துலத்முதலி எடுத்த முயற்சிகளை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுகூர்கிறேன்.

இந்தச் சீர்திருத்தங்களை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதே நமது அர்ப்பணிப்பாகும். இவற்றை நினைவுகூரும் வேளையில், ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு நிறைவு விழாப் பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here