ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமையும் பட்சத்தில் நாட்டில் நிச்சயம் மக்கள் ஆட்சி மலரும்

0
52

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமையும் பட்சத்தில் நாட்டில் நிச்சயம் மக்கள் ஆட்சி மலரும் எனவும், கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஊடாக தமிழ் பேசும் மக்கள் பல சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

சிலவேளை மக்கள் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தை எமக்கு வழங்கினால்கூட எதிரணியில் இருந்தேனும் கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் குரலாக சபையில் ஒயாது ஒலித்துக்கொண்டிருப்பேன் எனவும் அவர் கூறினார்.

நாவலப்பிட்டி வெஸ்டோல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“ பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் 5 நாட்களே எஞ்சியுள்ளன. பிரச்சார நடவடிக்கைகள் யாவும் நவம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. வேட்பு மனு தாக்கல் முதல் இதுவரையான காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தில் 13 தேர்தல் தொகுதிகளுக்கும் சென்று மக்கள் சந்திப்புகளை நடத்தி இருந்தேன்.

இதன்போது கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துள்ளதுடன், இம்முறை அந்த பதவியை ஆளுமையுள்ள, கரைபடியாத, தூய்மையான அரசியலை முன்னெடுக்கும் பாரத் அருள்சாமியாகிய எனக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது என்பது தெளிவாக புரிந்தது.

அதேபோல ஐக்கிய மக்கள் சக்தி போன்ற பிரதான கட்சியொன்றுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கும்போதே எவ்வித சவாலும் இன்றி தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். கணிசமானளவு வாக்குகளைப் பெறமுடியாத கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குகள் பயன் அற்றவை.

எனவே, ஐக்கிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் பேராதரவு வழங்கி, கண்டி மாவட்டத்தில் எனக்கான வாக்கை வழங்க வேண்டும். அதேபோல முஸ்லிம் சொந்தங்களும், சிங்கள மக்களும் தமக்கான மூன்று விருப்பு வாக்குகளில் ஒன்றை எனக்கு வழங்குவார்கள் என உறுதியாக நம்புகின்றேன். அவ்வாறு செய்யுமாறு கோரிக்கையும் விடுக்கின்றேன்.” -என்றார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here