ஐ.எம்.எப் ஐ மீறி எம்மால் செயற்படமுடியாது! பந்துல திட்டவட்டம்

0
54

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய கடன் வழங்கு நர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டைத் தவிர்த்து, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு தினத்திற்கும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும் எந்த அதிபர் நாட்டை ஆண்டாலும் அரசாங்கத்தின் ஆயுட்காலம் இரண்டு வாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு விடும்.

தடம் புரண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்த வருடத்தில் மீள நிவர்த்தி செய்துள்ளது. பிறந்துள்ள புதிய வருடம் தீர்க்கமான ஒரு வருடமாகும்.

தற்போது நிலவும் பொருளாதார சவால் 2027 ஆம் ஆண்டு வரை தொடரும். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டம் 2027 ஆம் ஆண்டு நிறைவு பெறும் வரை சட்டப்படி செயற்பட்டாலே நெருக்கடியை நிவர்த்தி செய்ய முடியும்.

சர்வதேச இணக்கப்பாட்டுடனான சட்டங்கள் மற்றும் நிதி முறைமைக்கு இணங்க நாடு என்ற ரீதியில் நாம் நிதி சந்தைக்கு சென்று பிணைமுறியை விநியோகித்து கடனைக் கோரினாலும் 2027 ஆம் ஆண்டு எமக்கு 1500 மில்லியன் டொலர்களை மட்டுமே கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும்2027 ஆம் ஆண்டு வரை மூன்று, நான்கு வருடங்களுக்கு இந்த சவால்கள் தொடரும்.

பெருமளவு இறக்குமதியிலேயே தங்கியுள்ள பொருளாதாரத்தை கொண்டுள்ள எமது நாடு எரிபொருள், உரம், மருந்து, இரசாயன பொருட்கள், அரிசி, மா, சீனி, கிழங்கு, வெங்காயம், பருப்பு, மிளகாய் உள்ளிட்ட நுகர்வு பொருட்கள் மற்றும் இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவற்றையும் இறக்குமதி செய்தே ஆக வேண்டும்.

அவற்றை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கத்தின் கையிருப்பின் அடிப்படையில் கடன் பத்திரத்தை விநியோகிப்பது அவசியம். இந்த பொருட்களைக் கொள்வனவு செய்யாமல் இரண்டு வாரங்களையும் எம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியாது.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here