ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்ததின் கீழ் இந்தியா தமிழகம் நோக்கி தாயகம் திரும்பியவராக சென்ற எமது மலையக உறவுகள் இன்று உணர்வோடு தாங்கள் பிறந்து வளர்ந்த மண் நோக்கி திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது. தலைமுறைகள் கடந்து மீளபுதுப்பிக்கப்படும் இந்த உறவு உணர்வு ரீதியாக மக்களை ஒன்றிணைத்து அடுத்த கட்ட நகர்வுக்கு அழைத்துச்செல்லும் என்ற நம்பிக்கை எனக்குள் எழுகிறது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.
தாயகம் திரும்பிய தமிழக உறவுகளால் கேகாலை, கந்தலோயா தமிழ் வித்தியாலயத்துக்கு இசைக்கருவிகள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு அண்மையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நான் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டாலும் மலைகத்திற்கான மக்கள் பிரதிநிதியாக எண்ணியே எனது பணிகளை ஆற்றிவருகிறேன். கேகாலை மாவட்டத்தின் முக்கியமான தமிழ் பாடசாலையான கந்தலோயா தமிழ் வித்தியாலயத்துக்கு நான் வருகை தரும் மூன்றாவது சந்தர்ப்பம் இது. முதல் தடவை பயணத்தின் போது குறை நிலைகளைப் பார்வையிட்டு அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் பயனாக இன்று 23 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் உருவாகி வருகிறது. விரைவில் இங்கு பாடசாலை கட்டட்த்துக்கான அடிக்கல் நாட்டுவதற்கான ஏற்பாடுகளை கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் மேற்கொண்டு வருகிறார்.அடுத்ததாக விளையாட்டுப்போட்டிக்கு வருகை தந்து இருந்தபோது தமது இல்லங்களை மலையக முன்னோடிகளான நடேசய்யர், சி.வி.வேலுப்பிள்ளை பெயர்களில் அமைத்திருந்த மாணவர்கள் ஒரு இல்லத்தை மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஆதிலட்சுமி கப்பல் போன்றும் மற்றைய இல்லத்தை மலையக மக்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்ப்பட்ட ஒப்பாரிக் கொச்சி போன்றும் அமைத்திருந்தனர். நான் அந்த இரண்டையும் அன்று உணர்வு பூர்வமாக தரிசித்தேன். விளையாட்டுப்போட்டிக்கு இல்லத்தை அலங்கரித்ததோடு நின்று விடாமல் அன்னலட்சுமி மூழ்கும் காட்சியையும் ஒப்பாரிக் கொச்சியில் மக்கள் அழுது புலம்பும் காட்சியையும் குறுந்திரைப்படமாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதனைப் பார்வையிட்ட தாயகம் திரும்பிய உறவுகள் இன்று உணர்வுடன் திரும்பி வந்து இந்தப் பாடசாலைக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.
அன்று ஒப்பாரிக்கோச்சியில் அழுது புலம்பி சென்றவர்கள் இன்று தமிழகத்தில் உயர் தொழில் புரிபவர்களாக திரும்பியுள்ளார்கள். இரத்தினபுரியில் இருந்து சென்ற தமிழகன் எனும் ராமச்சந்திரன் ஒரு சட்டத்தரணி, ஆகரப்பத்தனையில் இருந்து சென்ற செவ்வந்தி நீதிமன்ற நிர்வாக அதிகாரி, வரக்காப்பொலயில் இருந்து தம்பிராஜா கிராம நிர்வாக அதிகாரி. இன்று தம்பிராஜா தனது மாவட்ட பாடசாலைக்கு மலையக பாரம்பரிய இசைக்கருவிகளை அங்கிருந்து அன்பளிப்பாகக் கொண்டுவந்துள்ளார். அவர்கள், என்னையும் இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர் பேரில் இப்போது மூன்றாவது தடவையாகவும் இங்கே வருகை தந்துள்ளேன்.
எனது கட்டுரைகளும் அடங்கிய தமிழகன் தொகுத்தளித்திருக்கும் நூலான மலையகமும் மறுவாழ்வும் தமிழகத்தில் பதிப்பிக்கப்பட்டாலும் இலங்கையிலேயே முதல் வெளியீடு செய்யப்படல் வேண்டும் என தமிழகம் எண்ணியிருந்தார். அதற்காக கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றபோதும் எதிர்பாராதவிதமாக இன்று கந்தலோயா தமிழ் வித்தியாலயத்தில் வெளியிட்டு வைக்கப்படுகின்றது. ஒப்பாரிக் கொச்சியில் சென்றவர்களை காட்சிப்படிமாக்கிய கந்தலோயா பாடசாலையில் இந்த நிகழ்வுகள் அரங்கேற்றம் காண்பது உணர்வுபூர்மானது என்றும் தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்