ஒர்லாண்டோ துப்பாக்கிச் சூடு: 50 பேர் பலி! 53 பேர் காயம்! அமெரிக்க வரலாற்றில் ஒரே சம்பவத்தில் அதிக உயிர்கள் பலியான சம்பவம்!

0
240

ஒர்லாண்டோ – அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில் தனிநபர் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இதுவரை 50 பேர் இறந்துள்ளனர். 53 பேர் காயமடைந்துள்ளனர்.

இது போன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அமெரிக்காவில் நிறைய நடந்தாலும், ஒரே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அதிகமானோர் உயிர்ப்பலியானது இந்த சம்பவத்தினால்தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கின் இரட்டை கோபுரத் தாக்குதலான செப்டம்பர் 11 சம்பவத்திற்குப் பின்னர் மிகப் பெரிய மரண எண்ணிக்கையைக் கொண்ட பயங்கரவாத சம்பவமாக நேற்றைய சம்பவம் கருதப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவன் 29 வயது ஓமார் மிர் செடிக் மாட்டின் என்றும், அவன் நியூயார்க்கில் பிறந்தவன் என்றும் ஆப்கானிஸ்தான் பெற்றோர்களைக் கொண்டவன் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவனையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஓமார் ஒரு பாதுகாவல் அதிகாரியாக பணியாற்றியிருக்கின்றான்.

ஓர்லாண்டோ நகரில் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் கூடும் இரவு விடுதி ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடத்தப்பட்டிருக்கின்றது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னால், அந்த இரவு விடுதியில் இருந்த அனைவரும் ஐஎஸ் இயக்கத்திற்கு விசுவாசம் காட்ட வேண்டும் என அவன் மிரட்டி விட்டு, அதன் பின்னரே துப்பாக்கிச் சூட்டை அவன் நடத்தியிருக்கின்றான்.

அவனே, 911 என்ற அவசர அழைப்புகளுக்கான எண்ணை அழைத்து ஐஎஸ் இயக்கத்திற்கு தனது விசுவாசத்தைத் தெரிவித்தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here