பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆஸ்திரியா வில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை பெய்துவருகிறது. இதனால் பாரீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்க்கின்றன.
கன மழை காரணமாக ஐரோப்பா முழுவதும் 10க்கும் மேற்பட்ட பலியாகி உள்ளனர். ஜெர்மனியில் தான் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மற்றும் அந்த நாட்டின் மத்திய, தென் கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. பாரீஸில் ஓடும் ஸுன் நதியின் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோரங்களில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள், படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாரிஸ் மற்றும் மத்திய பிரான்ஸில், 25 ஆயிரம் பேர் மின்சார வசதியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. முனிச் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
பவேரியா மாகாணத்தில் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 10 அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தரைத்தளங்களை விட்டு வெளியேறி மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மழை காரணமாக ஜெர்மனியில் இதுவரை 10க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அடுத்த சில நாட்களுக்கும் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
இதேபோல ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது.