மரக் கடத்தலில் ஈடுபட்டிருந்தவர்களை பொலிஸார் சுற்றிவளைத்த நிலையில் தனது கணவனை கைது செய்ய முயன்ற பொலிஸாரை கடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் ஒட்டுசுட்டான் பொிய இத்திமடு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சட்டவிரோதமாக தேக்க மரங்கள் அறுக்கப்படுவதாக ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சட்டவிரோதமான முறையில் தேக்கமரங்கள் அறுத்துக்கொண்டிருந்தவர்களை சுற்றிளைத்துள்ளார்கள். இதனையடுத்து பலர் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இதனை அவதானித்த அவரது மனைவி கணவனை கைதுசெய்த பொலிஸ் உத்தியோகத்தரை கடித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கணவன் தப்பி ஓடிய நிலையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை,
பொலிஸாரை கடித்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மரக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடி காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர்
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.