கண்டி இரஜவெல இந்து தேசிய கல்லூரியின் விளையாட்டு துறைக்கு புதிய உத்வேகம் கிடைக்கும் வண்ணம் கண்டி திகன நகரில் அமைந்துள்ள மத்திய மாகாண விளையாட்டு கட்டிடத் தொகுதியை அக்கல்லூரி மாணவர்கள் இலவசமாக பயிற்சி பெறவும் விளையாட்டுப் போட்டிகள், மெய்வல்லுனர் போட்டிகள், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி மத்திய மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் திருமதி சுவர்ணா பெரேரா அவர்களால் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சின் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி அவர்களின் தலைமையில் கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பாக பாரத் அருள்சாமி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அண்மையில் கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் என்னுடைய அழைப்பின் பெயரில் இக் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் அதன்போது பல வருட காலங்களாக இக்கல்லூரி விளையாட்டு தொகுதியைபயன்படுத்திக் கொள்வதற்காக பல முயற்சிகளை கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக மேற்கொண்டிருந்த போதும் பயனளிக்கவில்லை எனவும் ஏற்கனவே இருந்த அரசியல் தலைமைகள் இதனை கண்டுகொள்ளவில்லை எனவும் அங்கே இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் எமக்கு தெரிவித்தனர்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுடைய பரிந்துரையின் கீழ் நான் மத்திய மாகாண ஆளுநர் மேதகு லலித் யூ கமகே அவர்களிடம் கலந்துரையாடி அவரின் அனுமதியுடன் இக் கல்லூரி மாணவர்கள் விளையாட்டு தொகுதியை பயன்படுத்திக்கொள்ள மற்றும் இங்கு இருக்கும் வளங்களின் மூலமாக அவர்களின் விளையாட்டுத்துறை மற்றும் தலைமைத்துவ பண்புகளை அதிகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
இந்த வேளையில் நான் அமைச்சர் அவர்களுக்கும் மத்திய மாகாண ஆளுநர் அவர்களுக்கும் மத்திய மாகாண விளையாட்டுதுறை பணிப்பாளர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இக் கல்லூரியின் அதிபர் திருமதி கோகிலேஸ்வரி அவர்களுக்கும்
விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ஆசிரியர் கௌரிசங்கர் அவர்களுக்கும் கண்டி வர்த்தகர் சங்கத்தின் தலைவர் அன்பழகன் மற்றும் குண்டசாலை தேர்தல் தொகுதியின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைப்பாளர்களான ஈஸ்வரன், குமார், மற்றும் நாகேஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என பாரத் தெரிவித்தார்
இம் முக்கிய நிகழ்வில் கல்லூரியின் மெய்வல்லுனர் பிரிவின் தலைவர்களும், விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகளும் பயிற்றுவிப்பாளர்களும் கலந்து கொண்டார்கள்.
க.கிஷாந்தன்