கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கு எதிராக அரங்கேறும் சூழ்ச்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்

0
104

” கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்பது காலத்தின் கட்டாயம். அந்த பிரதிநிதித்துவத்துக்கு எதிராக அரங்கேறும் சூழ்ச்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அரசியல் ரீதியில் மீண்டும் அநாதைகளாவதற்கு கண்டி மாவட்ட தமிழர் தயாராக இல்லை. எனவே, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்மீதான இடைக்கால தடையை மீளப்பெறும் – நீக்கும் முடிவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைப்பீடம் உடனடியாக எடுக்க வேண்டும்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட இளைஞர் அணி பொது செயலாளர் ஜீவன் சரண் கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்டியில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

” தாய் கருதரிப்பதற்கு முன்னரே குழந்தைக்கு பெயர் வைத்து விழா எடுத்துவிடமுடியுமா? அவ்வாறு செயற்படும் சிலரும் இருக்கவே செய்கின்றனர். இவ்வாறுதான் பாதீட்டு வாக்கெடுப்பில் ‘நடுநிலை’ என்ற எமது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் நிலைப்பாட்டை ‘அரசாங்கத்துக்கு ஆதரவானது’ என நினைத்துக்கொண்டு சிலர் சேறுபூசும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
அதுமட்டுமல்ல கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கும் திட்டம்போட்டு செயற்பட்டுவருகின்றனர். இதற்கு நாம் இடமளிக்கபோவதில்லை.

கடந்த காலங்களில் கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கு எதிராக உள்ளக சதிகள் அரங்கேறியும், கூட்டணி ஒற்றுமை கருதி நாம் அமைதி காத்தோம். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது காலைவாரும் முயற்சிகள் நடந்தும், நாம் எவருக்கு எதிராகவும் நடவடிக்கை கோரவில்லை. ஏனெனில் மக்கள் எம் பக்கம் என்பது தெரியும். கூட்டணியை விட்டு சென்றவர்களுக்குகூட மீண்டும் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது. அதனையும் நாம் விமர்சிக்கவில்லை.

எனினும், என்றும் மக்கள் பக்கம் நிற்கும் வேலுகுமார் தொடர்பில், தவறான புரிதலை ஏற்படுத்தும் விதத்தில் அவருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை ஏற்புடையது அல்ல. சிலவேளை மாற்று சக்திகளுடன் இணைந்து, தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கு எதிராக சூழ்ச்சி நடக்கின்றதா என்ற ஐயமும் எமக்கு ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்து, நிலைமையை சீர்செய்யும் பொறுப்பு தலைமைத்துவத்துக்கு உள்ளது. எனவே, எமது கோரிக்கையை ஏற்று, வேலுகுமார்மீதான இடைநிறுத்தம் மீளப்பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். அந்த கௌரவமான – நியாயமான முடிவு எடுக்கப்படும்வரை நாம் சுயாதீனமாக செயற்படுவோம்.” – என்றும் ஜீவன் சரண் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here