கனடா (Canada) அரசாங்கத்தின் புதிய மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உதவித்தொகைத் திட்டத்தின் (Canada Groceries and Essentials Benefit) கீழான கூடுதல் கொடுப்பனவுகள், தகுதியான பொதுமக்களின் வங்கி கணக்குகளில் இன்று முதல் வைப்பிலிடப்படவுள்ளன.
பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அவர்களால் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், தற்போது நடைமுறையிலிருக்கும் GST/HST வரவுத் திட்டத்திற்குப் (GST/HST credit) பதிலாக ஜூலை மாதம் முதல் முழுமையாக மாற்றியமைக்கப்படவுள்ளது.
அதன் ஒரு கட்டமாகவே இந்த ஒருமுறைக்கான கூடுதல் நிதி (One-time top-up) இன்று வழங்கப்படுகிறது.
குறைந்த வருமானம் பெறும் சுமார் 12 மில்லியன் கனடியர்கள் இந்த நிதியுதவியைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
இதன்படி, பிள்ளைகள் இல்லாத தனி நபர் ஒருவர் அதிகபட்சமாக $267 டொலர்களையும், இரண்டு பிள்ளைகளைக் கொண்ட தம்பதியினர் அதிகபட்சமாக $533 டொலர்களையும் பெற்றுக் கொள்வர்.
தங்களது 2024 ஆம் ஆண்டுக்கான வரி அறிக்கையை (Tax returns) தாக்கல் செய்து, தகுதி வரம்பிற்குள் வரும் கனடியர்களுக்கு இந்தத் தொகை நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளிலோ அல்லது தபால் மூலமாகவோ தானாகவே வந்தடையும்.
மேலும், வரும் ஜூலை மாதம் முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வழக்கமான காலாண்டு கொடுப்பனவுகளும் 25 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




