பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை தடுப்பதற்காக சட்ட ரீதியாக பெருந்தோட்டக் கம்பனிகள் முன்னெடுத்த முயற்சி தோல்வி கண்டுள்ளது. நீதி வென்றுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக இ.தொ.கா எவ்வழியிலும் போராடும் என்பதற்கு இது மற்றுமொரு சான்றாகும் – என்று இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரத்து 700 ரூபா சம்பள விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள அவர், இ.தொ.காவால் முன்னெடுக்கப்பட்ட தொழில்சங்க நடவடிக்கைக்கு பேராதரவு வழங்கிய மக்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபாவை நாளாந்த சம்பளமாக வழங்குமாறு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனங்கள் இடைக்கால தடை உத்தரவு கோரி இருந்தபோதிலும், அந்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதாவது தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வு என்பது நியாயமானது என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.
எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குவதற்கு முன்வருமாறு பெருந்தோட்ட நிறுவனங்களை வலியுறுத்துகின்றேன்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வு, பொறிமுறை அவசியம், அதனை ஏற்படுத்துவதற்குரிய தொடர் முயற்சிகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஈடுபட்டு வருகின்றது. அந்த முயற்சியில் நிச்சயம் வெற்றிநடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
இ.தொ.கா அன்று முதல் இன்று வரை மக்கள் நல அரசியலையே நடத்தி வருகின்றது, எப்படிதான் சவால்கள் வந்தாலும் மக்களுடன் தோளோடு தோழாக நின்றுள்ளது, மக்களும் காங்கிரஸ் பக்கம் நின்றுள்ளனர். சம்பள உயர்வு போராட்ட விடயத்தில் இது தெளிவாக தென்பட்டது.” – என்றார்.
(க.கிஷாந்தன்)