கில்லாடி என்று தமிழிலும் பயன்படுத்தப்படும் ஹிந்தி வார்த்தைக்கு போக்கிரி என்ற ஒரு அர்த்தமும் உள்ளது. போக்கிரி என்றால் அதில் நல்ல போக்கிரியும் இருக்கின்றார்கள். தீய போக்கிரிகளும் இருக்கின்றார்கள். போக்கிரி என்பதைவிட கில்லாடி என்றால் ஒரு கெட்டிக்காரன் என்ற அர்த்தமும் தமிழில் புரிந்துக்கொள்ளப்படுகிறது. கோபிகையரின் வெண்ணையை திருடி திங்கும் கிருஷ்ணனும் ஒரு கில்லாடிதான். அவன் பகவான் விஷ்ணுவின் அவதாரமான ஒரு நல்ல கில்லாடி. மகாபாரதத்திலே திரெளபதையிடம் தர்மசங்கடமான கேள்வியை எப்போதும் போல கேட்கும், நாரதரும் ஒரு கில்லாடிதான். அவரது கலகம் நன்மையில் முடியும் என்பதால் அவரும் ஒரு நல்ல கில்லாடிதான். கம்பன் கழக காப்பாளர் கம்பவாரிதியும் ஒரு கில்லாடிதான். ஒரு நல்ல கில்லாடி. வெண்ணெய் திருடி திங்கும் கண்ணனை போல, நல்ல விளைவை கொண்டுவரும் கலகக்காரர் நாரதரை போல, இவர் ஒரு நல்ல கில்லாடி என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் கொழும்பு கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழாவில் தலைமையுரை ஆற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இராமாயண சிற்பி கம்பனின் பெயரால் கொழும்பு கம்பன் கழகம் நடத்தும் விழாவிலே, மகாபாரத பாத்திரங்களை பற்றியே பேசுகிறேன் என யோசிக்காதீர்கள். கம்பராமாயண நாயகனும் பகவான் விஷ்ணு அவதாரம் தானே. அது இந்த விழாவின் பிதாமகன் கம்பவாரிதிக்கு இது நன்கு புரியும். இங்கே நான் சொல்ல வருவதே அதுதான். கம்பவாரிதியும் ஒரு கில்லாடிதான். ஒரு நல்ல கில்லாடி. வெண்ணெய் திருடி திங்கும் கன்னணனை போல, நல்ல விளைவை கொண்டுவரும் கலகக்காரர் நாரதரை போல, இவர் ஒரு நல்ல கில்லாடி.
அதுமட்டுமல்ல, அவர் ஒரு கள்வன். ஆமா, உள்ளம் கவர் கள்வன். உள்ளத்தை கவரும் கள்ளன்கள் அல்லது கள்ளிகள் எப்போதும் தமிழ் சினிமாவின் அஜித்குமார், விஜய், நயன்தாரா, சமந்தா என்றுதான் இருக்க வேண்டுமா? தமிழ் அரசியலில், ஐயா, சின்னையா, அம்மா, சின்னம்மா என்றுதான் இருக்கவேண்டுமா? பாருங்கள் இலங்கையில் வாழும் தமிழ் நடிக கலைஞர்களையோ அல்லது என்னைபோன்ற தமிழ் அமைச்சர்களையோ, எதிர்க்கட்சி தலைவர்களையோ, முதலமைச்சர்களையோ நான் இங்கே குறிப்பிடவில்லை. ஏனென்றால், நான் அல்லது நாங்கள் தமிழ் மக்களின் உள்ளங்களை கவர்ந்துள்ளோமோ என்று எனக்கு தெரியாது. ஆனால், கம்பவாரிதி இ. ஜெயராஜ், இலங்கையின் இங்கே மேலகத்தில், வடக்கில், கிழக்கில், மலையகத்தில், தெற்கில் வாழும் அனைத்து தமிழ் பேசும் பெருங்குடி மக்களின் உள்ளங்களையும் கவர்ந்துள்ளார். இது மிகையான வார்த்தைகள் அல்ல. அதேபோல் அவரது கம்பன் கழகம் ஒரு கலகம் அடக்கும் படை. ஆம், கலாச்சார கலகங்களை அடக்கி, எம் மொழி, இன, மத விழுமியங்களை ஒருமுகப்படுத்தி கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் கலகம் அடக்கும் படைதான் கம்பன் கழகம்.
அரசியல்வாதியான நான் இங்கே வந்து அரசியல் பேசாமல் போக முடியுமா? இது கலாச்சார மேடை என் நான் நினைத்திடவில்லை. கம்பவாரிதியே பெரும் அரசியல்வாதி. தேர்தலில் போட்டியிட்டு பதவி வகித்தால்தான் அரசியல்வாதியா? பலருக்கு தெரியாமல் இருக்கலாம். பல சந்தப்பங்களில் அவருடன் நான் முக்கிய அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்தாலோசனை செய்துள்ளேன். அவரும் அதை அப்படி செய்யுங்கள். இதை இப்படி செய்யுங்கள் என ஆலோசனை கூறியுள்ளார்.
இன்று நாம் ஒரு தீர்மானக்கரமான திருப்பத்தில் இருக்கின்றோம். அரசியல் தீர்வு ஒருபுறம் இருக்க, நமது இனத்தின் நாளாந்த வாழ்க்கை மற்றும் மனித உரிமை பிரச்சினைகளே தீர்ந்தபாடில்லை. கிழக்கில் எழுக தமிழ் போராட்டம் சுதந்திரமாக நடத்த முடிகிறது. மறுபுறம் கேப்பாபிளவில் காணி மீட்பு சத்தியாகிரகம் நடைபெறுகிறது. வவுனியாவில் காணாமல் போனோர் உண்ணாவிரதம் நடந்தது. அரசியல் கைதிகள் விவகாரம் பேசப்படுகிறது. இவற்றை சுதந்திரமாக செய்ய முடிகிறது. ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வுகள் கிடைக்கவில்லை. தீர்வுகள் கிடைக்காத வரைக்கும் போராட்டங்களை நடத்த வேண்டாம் என சொல்ல முடியாது. போராட்டங்கள் நடைபெறவே வேண்டும். மலையகத்தில் தனி வீட்டு திட்டம் நடைமுறையாகிறது. காணி வழங்கப்பட்டு அதற்கு சட்ட உறுதி பத்திரம் வழங்கப்படுகிறது. ஒரு அடி முன்னே போனால், இரண்டு அடி பின்னால் வருகிறோமா என தெரியவில்லை. அரசுக்கு வெளியே நடைபெறும் போராட்டத்தை போலவே, அரசுக்கு உள்ளேயும் நாம் போராடுகிறோம். இதனை மக்கள் புரிந்துக்கொண்டுள்ளார்கள்.
ஆகவே கிடைத்துள்ள சந்தப்பங்களை கவனமாக பயன்படுத்த வேண்டியுள்ளது. 1948ம் வருடமே, பிடிவாதமாக நின்று முஹமத் அலி ஜின்னாவை போல தனிநாட்டை பெற முயன்று இருக்கலாம். அதில்லாவிட்டாலும் அன்று தென்னிலங்கை சிங்கள தலைவர்களே தர தயார் என சொன்ன சமஷ்டியையாவது பெற்று இருக்லாம். சமஷ்டியையே வேண்டாம் என மறுத்துவிட்ட முட்டாள்களை ஆரம்பகால தலைவர்களாக கொண்ட இனம், இலங்கையிலே தமிழ் இனம். 1987ல் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, வடக்கு கிழக்கை இணைத்து தந்த தீர்வை புறக்கணித்தவர்கள், நாம். 2000ம் வருடம், சந்திரிகா பண்டாரநாயக்க கொண்டுவந்த தீர்வு, இன்று கிடைக்கும் என எதிர்பார்க்கும் தீர்வை விட முன்னேற்றகரமானது, அதையும் நாம் புறக்கணித்தோம். அன்று அதை ஐதேக பாராளுமன்றில் எரித்து எதிர்த்தது என்பதை சொல்லும் நாம், அன்று தமிழர் விடுதலை கூட்டணியும் அதை ஆதரிக்கவில்லை என்பதை பற்றி பேசுவதில்லை. கூட்டணியிடம் இருந்திருந்த எட்டு வாக்குகள் கிடைத்திருந்தால், அந்த சட்டம் நிறைவேறி இருக்கும் என்பதை இங்கே அமர்ந்து இருக்கும் சித்தார்த்தன் எம்பி தலையசைத்து ஏற்றுக்கொள்கிறார். கடைசியில் 2005ல் ரணிலை வெல்ல விடாமல் செய்து, ஒஸ்லோ தீர்மான திட்டத்தையும் இழந்தோம். ஆகவே வரலாறு முழுக்க சந்தப்பங்கள் நிறைய கைநழுவி போய் விட்டன என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.