அட்டன் கல்வி வலயத்தில் உதவி கல்விப் பணிப்பாளரான இப்ராஹிம் முகமட் நசீர் அவர்கள் தனது சேவையில் 40 வது ஆண்டில் கடந்த மாதம் காலடி வைத்துள்ளார்.
மஸ்கெலியாவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை மஸ்கெலியா சென்ஜோசப் கல்லூரியிலும் மஸ்கெலியா முஸ்லிம் வித்தியாலயத்திலும் கற்றார்.
இடைநிலைக் கல்வியையும் உயர் கல்வியையும் அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கற்றார்.
1977 ம் ஆண்டு மாவட்ட கஸ்ட பிரதேச ஆசிரியர் நியமனத்தில் இணைந்துக் கொண்ட இவர் 1984 ம் ஆண்டு யாழ்ப்பாணம் பலாலி பயிற்சி கலாசாலையில் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சியினை பெற்று உடற்கல்வி ஆசிரியரானார்.
மஸ்கெலியா முஸ்லிம் வித்தியாலயம், மஸ்கெலியா சென்ஜோசப் கல்லூரி, அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றினார்.
1991 ம் ஆண்டு சேவைக்கால ஆசிரியர் ஆலோசகராக பதவி உயர்வு பெற்று அட்டன் கல்வி வலயத்தில் கடமையாற்றினார்.
இவர் 1983ம் 1984 ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் உடற்கல்வி ஆசிரியராக தனது பயிற்சியை முடித்தார்.
1990ம் ஆண்டு முதல் 1999 ம் ஆண்டு வரை ஆசிரியர் தொலைக்கல்வி விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.
அதனை தொடர்ந்து 1995 ம் 1999 ம் ஆண்டுகளில் கலைமானி பட்டப் படிப்பை முடித்தார்.
பின்னர் 2008 ம் ஆண்டு ஆசிரியர் கல்வியில் முதுமானி பட்டப் படிப்பை முடித்தார். 2008ம் ஆண்டிலிருந்து 2010 ம் ஆண்டுவரை மடவளை மதீனா தேசிய பாடசாலையில் அதிபராகவும் கடமையாற்றினார்.
2011 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை அட்டன் கல்வி வலயத்தில் உடற்கல்வி உதவி கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.
இவர் மஸ்கெலியாவைச் சேர்ந்த முகமட் இப்ராகிம் ருக்கியா பீபீ தம்பதியினரின் புதல்வராவார்.
நோட்டன்பிரிஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்.