நாட்டிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரி (NCOE) மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் 8 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு (Ministry of Education) தீர்மானித்துள்ளது.
அதன்படி, புதிய மாணவர்களுக்கான உதவித்தொகையை செப்டெம்பர் மாதம் முதல் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், வரையறுக்கப்பட்ட பயிற்சி பெற்று தற்போது இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஓகஸ்ட் மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு போதாது என்ற நீண்டகால கோரிக்கையின் அடிப்படையில் இந்த வருட ஆரம்பத்தில் கொடுப்பனவை மூவாயிரம் ரூபாவினால் அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம் எடுத்திருந்தது.
எனினும் அமைச்சின் போதிய நிதி ஒதுக்கீடுகள் இல்லாததால், அந்த முடிவை இது வரை நடைமுறைப்படுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஆனால் கிடைக்கும் பணத்தை நிர்வகித்து கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.