கல்வி புரட்சி மூலம் மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்

0
89

” கல்வி புரட்சி மூலம் மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன். அதற்கான ஓர் பாலமாக அரசியலையும் பயன்படுத்துவேன். எதிர்வரும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் எனது பிரதிநிதிகளை நிறுத்துவேன்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளரும், விஷ்ணு ஆரோஹனம் அமைப்பின் தலைவருமான ச. திருமுருகன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (06.01.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2017ஆம் ஆண்டில் விஷ்ணு ஆரோஹனம் எனும் அமைப்பை ஆரம்பித்தேன். அதன் ஊடாக மலையகத்தில் கல்வி திட்டங்கள் மற்றும் சத்துணவு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் எனது சேவையை பாராட்டி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எனக்கு சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பதவியை வழங்கினார். தற்போது தொகுதி அமைப்பாளராக செயற்பட்டுவருகின்றேன்.

மலையக மக்களுக்கான எனது சேவைகளை, வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசியலும் ஒரு பாலமாக அமையும் என்பதால் பதவியை ஏற்று செயற்பட்டுவருகின்றேன். எதிர்காலத்தில் அரசியலிலும் வென்று, மக்கள் சேவையை தொடர்வேன்.

அதேவேளை, உள்ளாட்சிமன்ற தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன். எமது கட்சியின் சார்பில் நபர்கள் நிறுத்தப்படுவார்கள். மாகாணசபைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் அதில் போட்டியிடுவது சம்பந்தமாக எனது நிலைப்பாடு அறிவிக்கப்படும்.

மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டங்கள் உள்ளன. அவை தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களும் அவசியம். எனினும், கல்வி மேம்பாட்டுமூலம் விரைவில் மாற்றத்தை நோக்கி பயணிக்கலாம். அதனையே தற்போது நான் செய்துவருகின்றேன்.” – என்றார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here