ஜனாதிபதி வேட்பாளர்களுக்காக நடத்தப்படும் தேர்தல் கூட்டங்களில் பெருந்தோட்ட மக்களைப் பங்கேற்கச் செய்வதற்காகப் போத்தலில் அடைக்கப்பட்ட தரங்குறைந்த கள் விநியோகிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அமைச்சர் ஜீவன் தொண்டமான் மறுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கண்டன அறிக்கை ஒன்றினை வெளியிட்டு, ஜீவன் தொண்டமான் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் பெருந்தோட்ட சமூகத்தை பொறுத்தவரையில் கல்வியிலும், ஏனைய துறைகளிலும் வளர்ச்சியடைந்து வரும் சமூகமாகக் காணப்படுகின்றது.
எனினும் ஒரு சில அரசியல் நபர்களுக்காகவும், அரசியல் கட்சிகளுக்குச் சார்பாகவும் தனி நபர்கள் சிலரால் மலையகத்தை இலக்கு வைத்து இவ்வாறான தவறான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
அத்துடன் தேர்தல் காலங்களில் இவ்வாறான பொய்யான தேர்தல் பிரசாரங்களைப் பரப்பி அவர்களைப் பலப்படுத்திக் கொள்வதற்காக சில கருத்துக்களை ஊடகத்தின் ஊடாக வெளிப்படுத்தி வருகின்றனர் எனவும் ஜீவன் தொண்டமான் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர்களுக்காக நடத்தப்படும் தேர்தல் கூட்டங்களில் பெருந்தோட்ட மக்களைப் பங்கேற்கச் செய்வதற்காகப் போத்தலில் அடைக்கப்பட்ட தரங்குறைந்த கள் விநியோகிக்கப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடுகளை பெருந்தோட்டத்துறைமார் உள்ளிட்ட தோட்ட அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.
தரங்குறைந்த கள் போத்தல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதால் அவர்கள் உரிய வகையில் தொழிலுக்குப் பிரவேசிப்பதில்லை என்பதுடன் அவர்களின் வினைத்திறனும் குறைந்துள்ளதாக அந்த முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.