காசல்ரி நீர்தேக்கத்தின் நீரின் கொள்ளளவினை விரிவுப்படுத்தி நீரினை சேமிப்பதற்காக இலங்கையின் முதல் முறையாக அமெரிக்க தொழிநுட்பத்தில் பலூன் மேல் இயங்கும் வான் கதவுகளை பொறுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துள்ளதாக மின்சார சபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்
காசல்ரி நீர்த்தேக்கத்தில் அணைக்கட்டிலிருந்து வான் பாயும் அளவினை உயர்த்தி சர்வதேச தரத்திற்கு அமைவாக சுமார் 28 வான்கதவுகள் பொருத்தப்படவுள்ளன. நவீன தொழிநுட்பத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த திட்டம் அமெரிக்க பொறியியலாளர்கள் மற்றும் இலங்கை பொறியியலாளர்கள் இணைந்து நவீன தொழிநுட்பத்திற்கமைய முன்னெடுக்கப்பட்டு தற்போது நிர்மான பணிகள் ஆரம்பித்துள்ளன.
இந்த செயத்திட்டத்தின் மூலம் நீரினை முகாமைத்துவப்படுத்துதல் தன்னிச்சையாக வான்கதவுகள் திறத்தல், போன்ற செயப்பாடுகள் இடம்பெறுவதுடன் இதற்காக அணைக்கட்டின் மேல் வாயு பலூன் அழுத்தத்தின் ஊடாக வான் கதவுகள் செய்யப்படுகின்றன. முதல் முறையாக முன்னெடுக்கப்படும் குறித்த திட்டத்திற்காக காசல்ரி அணைக்கட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
காசல்ரி நீர்தேக்கத்தின் நீர் பரப்பளவு 63000 ஏக்கர்கள் ஆகும். இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான குறித்த நீர் தேக்கத்திலிருந்து இலங்கை முதலாவது நீர் மின் உற்பத்தி நிலையமான விமல சுரேந்திர, லக்ஸபான, மற்றும் பொல்பிட்டிய உள்ளிட்ட நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீரின் விநியோகம் செய்யும் பிரதான நீர்த்தேக்கமாகும்.
இந்நிலையில் இந்த அணைக்கட்டிற்கு மேல் இந்த 28 நவீன வான்கதவுகள் நிர்மானிப்பதனால் அணைக்கட்டுக்கு மேல் சுமார் நான்கு கண அடி வரை நீர் பரப்பு சேமிக்கப்படுகின்றன. இந்த செயத்திட்டத்தின் மூலம் இலங்கை மின்சார சபைக்கு தற்போது உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு மேலதிகமாக 9 ஜிகா வோட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்படும் என இவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
மத்திய மலைநாட்டில் தற்போது வரட்சியான காலநிலை நிலவி வருவதனால் இந்த திட்டத்தினை முன்னெடுப்பதற்கு பொருத்தமான காலப்பகுதி இதுவாகும். இந்த செயத்திட்டம் எதிர்வரும் மார்ச்மாதம் இறுதியில் நிறைவு பெற உள்ளன. குறித்த நீர்த்தேக்கத்தில் கடந்த காலங்களில் அணைக்கட்டுக்கு மேல் வழிந்தோடும் நீரினை சேமிப்பதற்கு பலகையினை பயன்படுத்தியே முன்னெடுக்கப்பட்டிருந்தன இதனால் அவை உடைந்து சென்றால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் பகுதியில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் சுற்றுப்புங சூழல் ஆகியன பாதிப்படையாலாம். எனவே மக்களினதும். சுற்றுப்புற சூழலினதும் பாதுகாப்பு கருதியே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மலைவாஞ்ஞன்