காட்டை காப்பாற்ற நினைக்கும் நாயகனின் போராட்டமே கடம்பன்!

0
217

மேற்கு தொடர்ச்சி மலையின் கடம்பவனத்தை தன் அன்னையாக நினைத்து வாழ்கிறது சில குடும்பங்கள். தலைவர் சூப்பர் சுப்பராயன், அவரது மகன் கடம்பன் (ஆர்யா), இன்னும் சில குடும்பங்கள் அந்த வனத்தில் கிடைக்கும் வளங்களை வைத்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். தொங்கு பாறையில் தொங்கிக் கொண்டே தேன் எடுப்பது, நண்பர்களுடன் கேலி பேசுவது, நாயகி கேத்ரின் தெரஸாவுடன் காதல் என நகரும் கதையில் ஃபாரஸ்ட் ரேஞ்சரால் சில சட்ட விரோத செயல்கள் நடக்கிறது. அவர்களை அங்கிருந்து காலி செய்ய பல பிரச்னைகளைக் கொடுக்கிறார். ஆர்யாவும் அவர் இடத்தினரும் அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே கடம்பன்.

உடலை பயங்கரமாக முறுக்கேற்றி, தோற்றத்தில் கம்பீரம் காட்டுகிறார் ஆர்யா. மலை உச்சியில் இருந்து குதிப்பது, சரசரவென மரம் ஏறுவது, ஓடுவது, தாவுவது என காட்டில் வசிக்கும் ஆளாக நம்பவைக்கும் படியான செய்கைகளை, ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாவற்றையும் நிறைவாகவே செய்கிறார். இடத்தை அபகரிக்க வருபவர்களிடம் கோபப்படுவது, கேத்ரின் தெரஸாவுடனான ரொமான்ஸ் என சில எக்ஸ்பிரஷன்களில் இன்னும் மெருகேற்றி நடித்திருக்கலாம். ஆர்யா தவிர படத்தில் கொஞ்சம் நடிப்பது சூப்பர் சுப்பராயன் மற்றும் ஆடுகளம் முருகதாஸ் மட்டுமே. மற்ற அனைவரும் எல்லா ஃப்ரேமிலும் கும்பல் கும்பலாக அட்மாஸ்பியரில் நிற்கிறார்களே தவிர மனதில் நிற்கும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கவில்லை.

காடு சார்பாக காட்டப்படும் எந்த டீட்டெய்லிங்கையும் அப்படியே ஏற்றுக் கொண்டு கதையுடன் ஒன்ற முடியவில்லை. காட்டில் கிடைக்கும் ஒருவகைக் காயை, ஃபுட்பாலாக உதைத்து எதிரிகளின் ஜே.சி.பிக்களை துவம்சம் செய்வது, டயர்களைக் கொண்டே வில்லன்களைத் துரத்துவது என்று காட்சிப்படுத்திய எதிலும் நம்பகத்தன்மை ஜீரோ! தொலைந்து போனவர்கள் ஊ ஊ என ஒலி எழுப்பி சேர்ந்து கொள்வதெல்லாம் ‘அன்பு மலர்களே.. நம்பி இருங்களே’ டைப் பாஸ்! அதிலும் ஆர்யா-கேத்ரின் தெரஸா ரொமான்ஸுக்கு கூட ஒரு சவுண்ட் கொடுத்திருப்பதெல்லாம்… எதுக்க்க்க்க்கு.

அவ்ன் மட்டும் என் கைல கடிக்கட்டும்’ எனத் தமிழைத் தாறுமாறாகப் பேசும் அந்த போலீஸை எங்க பாஸ் புடிச்சீங்க? அதை விட வில்லனாக நடித்திருக்கும் தீப்ரஜ் ரானா கதாபாத்திரம் பரிதாபம். ‘காட்ட அழிக்க நினைக்கறது, உன் ஆத்தாளோட கர்பப் பையில் இருந்துகிட்டு அவளோட வயித்த கிழிக்கிறது மாதிரிடா, அதனால சாகப் போறது உன் அம்மா மட்டும் இல்ல நீயும் தான்டா’ என ஆர்யா பேசும் வசனம் கேட்டுவிட்டு அவர் கையால் அடிவாங்கி சாகிறார்.

ஆடுகளம் முருகதாஸ் செய்யும் காமெடிகளுக்கு சிரிப்பதா, ஐயோ பாவம் இவங்களுக்கு காமெடி வரலையே எனப் பரிதாபப்படுவதா எனத் தெரியவில்லை. அதிலும், மாமியாரை வைத்து செய்யும் ஏ ஜோக்குகள் எல்லாம், கொடூரம். யுவன் இசையில் ஒற்றைப் பார்வையில் பாடல் மட்டும் ஓகே. மற்ற பாடல்கள்.. ம்ஹும். பின்னணி இசை ஓரளவு படத்தைக் காப்பாற்றுகிறது. எஸ்.ஆர்.சதீஸ்குமார் ஒளிப்பதிவில் அருவி சம்பந்தப்பட்ட காட்சி.. அருமை. க்ளைமாக்ஸில் அத்தனை யானைகளுக்கு நடுவே வரும் அந்த சண்டைக்காட்சி பிரமிப்பு. மற்றவை அத்தனை எடுபடவில்லை. கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் ஆஹா ஓஹோ இல்லை என்றாலும்.. ஏமாற்றவில்லை.

விகடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here