1989 ஜேவிபி எழுச்சியின் போது காணாமல் ஆக்கப்பட்டோரை நினைவுகூரும் வகையில் சீதுவை ரத்தொழுவ பகுதியில் அமைக்கப்பட்டுள்ளநினைவு தூபிக்கு அண்மையில் வருடாந்தம் இடம் பெறும் நினைவு கூரல் நிகழ்வுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவரிடமிருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என தெற்கில் காணாமல் போனோரின் உறவினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
1989 ஆம் ஆண்டளவில் ஜே வி பி எழுச்சியின் போது அதன் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டனர்.
இதற்கிடையே கொல்லப்பட்டிருந்த தொழிற்சங்கவாதியான எச்.எம் ரஞ்சித் மற்றும் அவரது சட்டத்தரணி ஆகியோரின் உடல்கள் ரத்தொழுவ பகுதியில் கண்டறியப்பட்டன.
இதனை அடுத்து ரத்தொழுவ பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி தெற்கில் காணாமல் போனோரை நினைவு கூறும் இடமாக மாற்றம் கண்டது.
வருடாந்தம் அக்டோபர் 27 ஆம் திகதி குறித்த இடத்தில் நினைவு கூரல் இடம்பெறுகிறது.
இந்நிலையில் நினைவு கூரல் நிகழ்வுக்கு தெற்கில் காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தால் ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் பதில் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.




