மலையக மக்களிடத்தில் இப்போது அபிவிருத்தி குறித்த முற்போக்கான சிந்தனைகள் வலுப்பெற்றுள்ளன. பிரதேச சபைகளின் அதிகரிப்பு , பிரதேச செயலகங்களின் அதிகரிப்பு போன்ற விடயங்களிலும் காணியுரிமை , வீட்டுரிமை முதலான விடயங்களிலும் அவர்கள் அக்கறை காட்டி வருகின்றனர். இது முற்போக்கான மாற்றமாகும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
தனது பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட லபுக்கலை கீழ் பிரிவு தோட்டத்திற்கான பாலத்தினை அமைக்கும் ஆரம்ப விழா அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்படி கருத்தினை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாம் மக்களுக்கான அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளை அவர்களிடத்தில் இருந்தே பெற்றுக்கொள்கின்றோம். ஆலயத்திற்கு சிலையும் சீமெந்தும் சமையல் பாத்திரங்களும் பஜனைப்பொருட்களும் வழங்கிவைத்தல் மாத்திரமே அபிவிருத்தி கோரிக்கைகளாகவும் அவற்றைப் பெற்றுக்கொடுப்பதே அபிவிருத்திப்பணிகள் என்றும் இருந்த மலையக அரசியல்கலாசாரத்தில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போதும் கூட கோயிலுக்கு சிலை கொடுப்பதை அரசியல் அபிவிருத்தியாக சிலர் செய்து வருகின்றனர். நாமும் ஆலயங்களுக்கு உதவி வருகிறோம். ஆனால், அதனை வைத்து அரசியல் செய்வதில்லை. அது மக்களின் கோரிக்கையின் ஒரு பகுதி மட்டுமே.
மலையக மக்களிடத்தில் இப்போது அபிவிருத்தி குறித்த முற்போக்கான சிந்தனைகள் வலுப்பெற்றுள்ளன. பிரதேச சபைகளின் அதிகரிப்பு பிரதேச செயலகங்களின் அதிகரிப்பு போன்ற விடயங்களிலும் காணியுரிமை வீட்டுரிமை முதலான விடயங்களுக்கும் அவர்கள் முன்னுரிமை கொடுத்து கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். வீடமைப்பு தொடர்பிலான அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவு செய்ய முடியாத போதும் நாம் தனிவீட்டுக்கானதும் காணியுரிமைக்கானதுமான அடித்தளத்தை நாம் உறுதியாக இட்டுச் செல்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
தலவாக்கலை பி.கேதீஸ்