நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து பெருந்தோட்டப்பகுதியில் வாழுகின்ற மக்கள் பெருந் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
பெரும் பாலான குடும்பங்கள் அன்றாட தங்களது ஜீவனத்தினை கொண்டு நடத்துவதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக போசாக்கான உணவு உட்கொள்வதிலும் குடும்பங்களை கொண்டு நடத்ததுவதிலும் பலர் இடர்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு இடர் படும் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் குடும்ப பொருளாதாரத்தினை மேம் படுத்தும் நோக்கில் சுய தொழில் பயிற்சி பட்டறை ஒன்று இன்று (26) கொட்டகலை பிரிடோ நிறுவனத்தில் நடத்தப்பட்டது.
குறித்த பயிற்சி பட்டறையில் தங்களுக்கு இருக்கும் இடத்தில் எவ்வாறு சுய தொழில் மேற்கொள்வது சுய தொழில் ஊடாக எவ்வாறு வருமானத்தினை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு ஆலாசனை வழிகாட்டல்களும் சுய தொழில் பயிற்சியும் இதன் போது பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இந்த பயிற்சியில் காளான் வளர்ப்பு,ஜேம் தயாரித்தல்,கடித உறை செய்தல்,அலங்கார பொருட்கள் உருவாக்குதல் வீட்டுத்தோட்டம் உள்ளிட்ட பல பயிற்சிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டு அவற்றை செய்வதற்கான மூலப் பொருட்களும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.
பிரிடோ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல் ஆர் ஜோக்கிம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த பயிற்சி பட்டறைக்கு பொகவந்தலா,மஸ்கெலியா,லிந்துலை,டயகம,அக்கரபத்தனை நானுஓயா உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து வறுமை கோட்டின் கீழ் வாழும் சுமார் 70 குடும்பங்களைச் சேர்ந்த குடும்ப தலைவிகள் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த செயத்திட்டத்திற்கு தேவையான நிதியுதவியினை டிரேட்டேட் என்ற அவுஸ்த்திரேலியா நிறுவனம் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
பயிற்சி பட்டறையின் வழிகாட்டாளர்களாக எட்ரா நிறுவனத்தின் சுய தொழில் பயிற்சி திட்டத்தி;ற்கு பொறுப்பான என். கணகரட்ணம் சரண்யா மாரித்து உள்ளிட்ட பலர் கலந்து பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் செய்தனர்.
மலைவாஞ்ஞன்