குரங்கம்மை தொற்றிய இந்தோனேசிய பெண் குழந்தையுடன் சில சிகிச்சை நிலையங்களுக்கு சென்றுள்ளதாக தகவல்

0
158

பெண்ணுக்கும் அவர் இலங்கை பிரசவித்த குழந்தைக்கும் குரங்கம்மை வைரஸ் தொற்றியுள்ளதை சுகாதார துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
துபாய் நாட்டில்இருந்து இலங்கைக்கு வந்த இந்தோனேசிய பெண்ணுக்கும் அவர் இலங்கை பிரசவித்த குழந்தைக்கும் குரங்கம்மை வைரஸ் தொற்றியுள்ளதை சுகாதார துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரும் கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையின் சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குரங்கம்மை வைரஸ் தொற்றுக்கு உள்ளான பெண் மற்றும் குழந்தை ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்னர் சில மருத்துவர்களை சந்திக்க சிகிச்சை நிலையங்களுக்கு சென்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குரங்கம்மை வைரஸ் தொற்றியுள்ள 34 வயதான இந்த பெண், கடந்த ஏப்ரல் மாதம் மகபேறுக்காக பேருவளை, ஹல்கந்தவில பிரதேசத்தில் உள்ள தனது கணவனின் வீட்டுக்கு வந்தார்.

இதனையடுத்து கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி குழந்தையை பிரசவித்துள்ளார்.

அப்போது பெண்ணுக்கும் குழந்தைக்கும் குரங்கம்மை தொற்றியமைக்கான எந்த அறிகுறிகளும் இருக்கவில்லை.

குழந்தை பிறந்த பின்னர் துபாயில் இருந்து கணவரும் இலங்கை திரும்பியுள்ளார்.

குழந்தையின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டதால், பெண்ணும், கணவரும், சிகிச்சைக்காக குழந்தையுடன் சில மருத்துவர்களை சென்று சந்தித்துள்ளனர்.

குழந்தைக்கு ஏற்பட்டுள்ள நோயை சரியாக உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால், கடந்த 4 ஆம் திகதி கொழும்பு சீமாட்டி றிஜ்வே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

இதன் போது குழந்தைக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து உருவான சந்தேகத்தை அடுத்து பிறந்த ஏழு நாளான குழந்தை மற்றும் தாயை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன் பின்னர் உடனடியாக அன்றைய தினம் மாலை இந்த நோய் தொடர்பில் மேலதிக பரிசோதனைகளுக்காக குழந்தை மற்றும் தாய் ஆகியோர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அங்கு குழந்தை மற்றும் தாய்க்கு நடத்தப்பட்ட மரபணு பரிசோதனையில் இருவருக்கும் குரங்கம்மை வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் துபாய் நாட்டில் இருந்த போது, கணவருக்கு குரங்கம்மை நோய் ஏற்பட்டு குணமாகியது தெரியவந்துள்ளது.

கணவரிடம் இருந்து பெண்ணுக்கும் பிள்ளைக்கும் குரங்கம்மை தொற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், பேருவளை ஹல்கந்தவில வீட்டில் இருக்கும் வைரஸ் தொற்றியுள்ள இந்தோனேசிய பெண்ணின் தாய், கணவரின் தந்தை உட்பட நான்கு பேரை வீட்டில் இருந்து வெளியில் செல்ல வேண்டாம் என பிரதேச சுகாதார பரிசோதகர்கள் அறிவித்துள்ளனர்.

தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இது சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இவர்களுக்கு எவ்வித அறிவிப்புகளையும் வழங்கவில்லை என தெரியவருகிறது.

இந்த நிலையில், இலங்கைக்குள் குரங்கம்மை வைரஸ் பரவுவதை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமான விமான நிலையம் மற்றும் துறைமுகம் மாத்திரமல்லது சுகாதார துறையிருக்கு அறிவுறுத்தும் சுற்றறிக்கை ஒன்றை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வெளியிட்டிருந்தார்.

இதனடிப்படையில் குரங்கம்மை வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு 95 வீதம் நோய் அறிகுறிகள் தென்படும்.

குரங்கம்மை வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் என சந்தேகிக்கும் நோய் அறிகுறிகள் தென்படும் நபர்கள், தகவல்களை வழங்க விமான நிலையத்தில் படிவமும் வழங்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு திடீரென உடலில் ஏற்படும் கொப்பளங்களுடன் தவைலி, உடனடியாக ஏற்படும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் இருக்குமாயின் அவர் குரங்கம்மை தொற்றுக்கு உள்ளானவர் என சந்தேகிக்க முடியும்.

இதற்கு முன்னர் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட குரங்கம்மை வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இரண்டு பேரும் துபாயில் இருந்து இலங்கை வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here