திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் குளவி தாக்குதலுக்குள்ளான இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் தொழில் மேற்பார்வையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஐ.தங்கராஜ் (வயது 57) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த இந்த சம்பவம் 06.07.2018 அன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் தேயிலை தொழில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்களை தேயிலை மலை அடிவாரத்தில் இருந்த குளவி கூடு ஒன்று கலைந்து இவ்வாறு தாக்குதலை நடத்தியுள்ளது.
இதன்போது கொழுந்து பறிக்கும் பெண் தொழிலாளர்களை பார்வையிடும் மேற்பார்வையாளரான உயிரிழந்த நபரையும், மேலும் ஒரு பெண் தொழிலாளியையும் குளவி தாக்கியுள்ளது.
இதனையடுத்து இவ்விருவரையும் உடனடியாக கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் கினிகத்தேனை தியகல பகுதியில் வைத்து குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இதன்பிறகு உயிரிழந்த நபரை கினிகத்தேனை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன், பெண் தொழிலாளியை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)