கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் நான் மேன்முறையீட்டு நீதிமன்றம் தாக்கல் செய்துள்ள எழுத்தானை வழக்கானது தனித்து எனதோ அல்லது எமது சங்கத்தின் முயற்சி என்றும் மட்டும் நாம் பார்க்கவில்லை. மாறாக கூட்டு ஒப்பந்த்திற்கு எதிராக தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வழக்கிட வேண்டும் என்று வெளிப்படையாக கூறிய மற்றும் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று அபிப்பராயம் கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் சார்பாகவே நாம் வழக்கிட்டுள்ளோம் என்று கருதுகின்றோம்.
வழக்கின் தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமைந்தாலும் அமையாவிட்டாலும் தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு செயற்பாடுகள் அவசியமாகும். தீர்ப்பு சாதகமாக வருமிடத்து புதிய கூட்டு ஒப்பந்த்தை செய்ய கம்பனிகளையும் தொழிற்சங்களையும் நீதிமன்றம் நிர்ப்பந்திக்கும். இச் சந்தர்ப்பத்தில் தொழிற்சங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க தொழிலாளர்களும் தொழிலாளர் சார்பு தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், தனிநபர்கள் முன் வர வேண்டும். அதேபோல் தீர்ப்பு சாதமாக அமையாத விடத்தும் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மிகுந்த தயாரிப்பு அவசியமாகிறது.
பாக்கி சம்பளம் மறுப்பு, சம்பள உயர்வு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இருந்தமை கால வரையறையின் பேணுவதற்கான ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளமை, நுணுக்கமான முறையில் முன்னர் பெற்ற 620 நாட்சம்பளத்தை விட குறைவான சம்பளத்தை பெறுவதற்கான ஏற்பாடுகளை சேர்த்துள்ளமை, அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் வெளியாள் உற்பத்தி முறை சேர்த்துள்ளமை போன்ற விடயங்கள் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை மறுக்கும் அதேவேளை அவர்களை நவீன அடிமைகளாக ஆக்கும் முயற்சியின் விளைவாகும்.
இது வரை அனுபவித்த உரிமைகளையும் இழந்து தொழிலாளர் நவீன அத்தக்கூலிகளாக ஆக்கும் முயற்சிகள் இன்றை ஆளும் வர்க்கங்களாலும் அதற்கு துணை போகும் தொழிற்சங்கங்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்தின் ஒரு ஆரம்ப நிலை நடவடிக்கையே வழக்கு நடவடிக்கையாகும். எனவே, வழக்கு நடவடிக்கைக்கும் ஒத்துழைப்பை வழங்கும் அதேநேரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அப்பால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் அவர்களின் இருப்பை பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மீது அக்கறைக் கொண்டவர்கள் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்.
வழக்கு நடவடிக்கைகளுக்கு தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்க அரசியற் கட்சி பேதமின்றி எமக்கு ஆதரவை வழங்க வேண்டும். தோட்டத் தொழிலாளர் உரிமையில் அக்கறைக் கொண்ட மலையகத்தை சார்ந்த சிவில் அமைப்புகள், தனி நபர்கள் தங்களால் வழங்க கூடிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு செயற்படுவதற்கு இனியும் தாமதிப்பது தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான அரசாங்கம், கம்பனிகளிடத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை விட்டுவிடுவதாக அமைந்து விடும்.
எனவே, கூட்டு ஒப்பந்த்திற்கு எதிராக வழக்கு நடவடிக்கைகளுக்கு உங்களால் வழங்ககூடிய ஒத்துழைப்புகளை எமக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மத்தியக் குழு சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு 071-4302909-071-6275459
சட்டத்தரணி இளையதம்பி தம்பையா
பொதுச் செயலாளர்
மக்கள் தொழிலாளர் சங்கம்.