கெட்டபுலா ஆட்டோ தரிப்பிட தமிழ் இளைஞர்களுக்கு தொல்லை கொடுக்கும் அரசியல்வாதி; சோ.ஸ்ரீதரன் குற்றச்சாட்டு!

0
135

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட கெட்டபுலா சந்தியில் தமிழ் இளைஞர்களுக்கு ஆட்டோ பார்க் ஒன்றை ஏற்படுத்துவதில் கொத்மலை பிரதேச அரசியல் பிரமுகர் ஒருவர் எதிராக செயற்படுவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது :
நாவலப்பிட்டி – தலவாக்கலை பிரதான பாதையில் கெட்டபுலா சந்தியில் உள்ள ஆட்டோ பார்க்கில் தமிழ் இளைஞர்கள் தமது ஆட்டோக்களை நிறுத்துவதற்கு பெரும்பான்மையின இளைஞர்கள் தொடர்ச்சியாக இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.

இடைக்கிடை இந்த இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நாவலப்பிட்டி பொலிஸாருடன் தொடர்பு கொண்டு அவ்வப்போது தீர்வு காணப்பட்டது. எனினும் கொத்மலை பிரதேச பெரும்பான்மையின அரசியல் பிரமுகரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து தமிழ் இளைஞர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கொத்மலை பிரதேச சபை ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு தமிழ் இளைஞர்களுக்கான ஆட்டோ தரிப்பிடம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தேன்.

அதன் பின்பு தமிழ் இளைஞர்கள் ஆட்டோ ஓட்டும் பணியில் ஈடுபட்டனர். இதன் பின்பு கொத்மலை பிரதேச சபையினால் ஆட்டோ தரிப்பிடத்துக்கான பெயர்பலகை பொருத்தப்பட்டது. இந்தப்பெயர் பலகைப் பொருத்தப்பட்டதன் பின்பு கெட்டபுலா சந்தியிலுள்ள பெரும்பான்மையினத்தவர்கள் கொத்மலை பிரதேச அரசியல் பிரமுகருடன் தொடர்பு கொண்டதன் பின்பு அந்தப்பெயர்பலகை கொத்மலைப் பிரதேச சபையினால் அப்புறப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நான் கொத்மலை பிரதேச செயலாளரிடம் எனது ஆட்சேபனையைத் தெரிவித்ததைத் தொடர்ந்து மீண்டும் பெயர்ப்பலகை குறிப்பிட்ட இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. எனினும் அந்தப் பெயர்பலகையை அப்புறப்படுத்துவதற்கு குறிப்பிட்ட அரசியல் பிரமுகர் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார் என்று தமிழ் இளைஞர்கள் எனது கவனத்துக் கொண்டு வந்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக நான் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு கெட்டபுலா ஆட்டோ பார்க் தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் எமது அதிருப்தியை வெளிப்படுத்துவோம் என்று அறிவித்துள்ளேன். இதே வேளை இந்தப் பிரச்சினைக்குத் தூண்டுகோலாக அரசியல் பிரமுகர் குறித்து பிரதம மந்திரியின் கவனத்துக்கும் கொண்டு வரவுள்ளேன்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here