தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெட்டபுலா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இப் பகுதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
07.06.2018 அன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், குறித்த மரம் மின்சார இணைப்புகள் மீது விழுந்ததினால் மின்சார கம்பங்கள் சேதமடைந்துள்ளதோடு, மின் கம்பிகளும் அறுந்து பிரதான வீதியில் விழுந்துள்ளன. குறித்த மின் கம்பிகளில் மின்சாரம் துண்டிக்கப்படாமல் தொடர்ந்தும் மின்சாரம் பாய்வதனால் ஆபத்தான நிலை காணப்படுகின்றன. இதனால் மக்கள் பெரும் அச்சத்துடன் இருக்கின்றனர்.
இதேவேளை பிரதான வீதியில் இம்மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து சுமார் 12 மணித்தியாலங்களுக்கு மேல் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் 07.06.2018 அன்று இரவு முதல் 08.06.2018 அன்று காலை வரை மரத்தை அகற்றவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து 08.06.2018 அன்று காலை இலங்கை மின்சார சபையினர் அவ்விடத்திற்கு விரைந்து மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர்.
மேலும் மின்சார இணைப்பினை சீர்செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
(க.கிஷாந்தன்)