நுவரெலியா மாவட்டத்தில் நகர மற்றும் தோட்டப்பகுதிகளிலுள்ள சில பாடசாலைகளில் போதைப்பொருளுக்கு அடிமையான மாணவர்களை அதிலிருந்து விடுவித்து, நல்வழிப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம், கொட்டகலை வர்த்தக சங்கத்தால் இன்று (14.12.2022) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று மேற்படி சங்கத்தின் தலைவர் வி. புஷ்பா தெரிவித்தார்.
கொட்டகலை நகரம் மற்றும் அதனை அண்மித்த தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் சிலர், போதைப்பொருட்களை பாவித்து வருகின்றனர் என சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களால், திம்புள்ள – பத்தனை பொலிஸார் மற்றும் வர்த்தக சங்கத்தினரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிலையிலேயே மாணவர்களை பாதுகாப்பதற்காக விசேட குழுவொன்றை அமைத்து, அதன் ஊடாக வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு சபையின் நுவரெலியா மாவட்ட இணைப்பதிகாரி எஸ்.எஸ்.டபிள்யூ. விஜேரத்னவால், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிவில் பிரதிநிதிகளுக்கு இது பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களை விநியோகிக்கும் இடங்களை அடையாளம் கண்டு, சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்வதற்கும், போதைக்கு அடிமையான மாணவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் எஸ்.எஸ்.டபிள்யூ. விஜேரத்ன கூறியுள்ளார்.
பாடசாலைக்குள் போதைப்பொருட்கள் உள்நுழைவதை முற்றாக தடுப்பதற்கு அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வி சமூகத்தினர் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம் எனவும், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை – விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல் இருந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்துமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
(க.கிஷாந்தன்)