கொத்மலை வெதமுல்ல. லில்லிஸ்லேண்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் பாதிப்புற்ற மக்களுக்கு விரைவில் புதிய வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.குறித்த தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள 109 குடும்பங்களைச் சேர்ந்த 334 பேர் ரம்பொடை இந்து மகா வித்தியாயலத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இடர் முகாமைத்துவ பிரதி அமைச்சர் பாலித்த ரங்க
பண்டாரவுடன் 27.5.2018 தற்காலிக முகாமுக்கு பயணித்து பொதுமக்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்தமோடு நிவாரணப் பொருட்களையும் வழங்கிவைத்தபோதே மேற்படி உறுதி மொழியை வழங்கினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்தபோது ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு இதே பிரதேசத்தில் மண்சரிவு அனர்த்தம்
நிகழ்ந்தபோது அங்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஏற்பாட்டில் 20 வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டம் அமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வருகின்றனர்.
அதே சுழலில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை நாம் அமைக்கவுள்ளோம்.இதற்கு தேவையான காரணிகளைத் தோட்ட நிர்வாகத்திடம் பெற்றுக் கொண்டுள்ளதுடன் தற்காலிக கூடாரங்களை அமைப்பதற்கான ஆயத்தங்களை கொத்மலை பிரதேச செயலகத்துடன் இணைந்து பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
அத்துடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து புதிய வீடமைப்புத் திட்டத்தை அமைக்கும் தீர்மானம் இன்று நடைபெறும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
தலவாக்கலை பி.கேதீஸ்