கொத்மலை வெதமுல்ல லிலிஸ்லேண்ட் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!!

0
120

கொத்மலை வெதமுல்ல லிலிஸ்லேண்ட் தோட்ட மக்கள் 23.03.2018 அன்று தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வெதமுல்ல லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் வசிக்கின்ற சுமார் 105 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், சிதைவடைந்துள்ள தமது வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.

கடந்த 2015ம் ஆண்டு பாரிய மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் வரை உயிரிழந்தனர். எனினும் முற்றாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பட்டதோடு, அப்பகுதியில் மண்சரிவு அபாயமாக இருந்த ஏனைய குடும்பத்தாருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என அதிகாரிகளால் வாக்குறுதிகள் அளித்தபொழுதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Photo (15) Photo (13) Photo (11) Photo (8)

தோட்டத்தில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு, கறுப்பு கொடிகளையும் ஏந்தி சுமார் 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிகளோ இதுவரை எவ்வித உதவிகளையேனும் செய்து தரவில்லை என அங்குள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

சீரற்ற காலநிலை வந்ததும், மழை அதிகமாகப் பெய்ய ஆரம்பித்ததும், அங்குள்ள வைத்தியசாலையிலும், பாடசாலையிலும் தங்குமாறு அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பணிக்கின்றார்கள். மழை நின்றதன் பின்னர் ‘உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள்’ என அதிகாரிகள் கூறுகின்றார்கள். பிறந்தது முதல் சாகும் வரை உயிர் ஆபத்தினையும், மரணம் எப்போது என்ற மனப்பயத்துடனும் அவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

குறித்த தோட்டப் பகுதியைச் சுற்றிலும் தேயிலைத் தோட்டம், கற்பாறைகள் காணப்படுகின்றன. லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் உள்ள மலை உடைந்து காணப்படுகின்றது. மழை ஏற்பட்டால், அந்த மலை சரிந்து விடும். அவ்வாறு சரிவு ஏற்பட்டால், அங்குள்ள மக்கள் அனைவரும் உயிரிழக்க வேண்டிய ஆபத்து காணப்படுகின்றது.

சிறுவர்கள், குழந்தைகள் வசிக்கும் இந்தப் தோட்டப் பகுதியில் மீண்டும் உயிரிழப்புக்களும் அழிவுகளும் இடம்பெறுவதற்கு முன்னர் அரசாங்கமும், அரசியல்வாதிகளும் கண்விழித்து மக்களுக்கு உரிய பாதுகாப்பினையும், வீடுகளையும் அமைத்துக் கொடுக்க வேண்டுமென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் கோரிக்கை விடுகின்றார்கள்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here