கொல்கத்தா (Kolkata) பெண் மருத்துவர் வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட மரபணு சோதனையில் கூட்டு வன்புணர்வு நடக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 9 ஆம் திகதி கொல்கத்தா மருத்துவமனையொன்றில் பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார். அதற்கு அடுத்தநாள் இந்த விடயம் தொடர்பில் காவல்துறை தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பெண் மருத்துவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், மரபணு சோதனையில் சஞ்சய் ராயுடன் ஒத்துப்போவதாக சிபிஐ அதிகாரிகள் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குற்றத்தில், சஞ்சய் ராய் ஒருவர் மட்டுமே குற்றவாளியாக இருக்க முடியும் என்றும், விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும், பெண் மருத்துவரை கூட்டு வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, சஞ்சய் ராய்க்கு எதிராக பெண் மருத்துவர் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையை மிகத் துல்லியமாக தயாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் விரைவில் அதனை தாக்கல் செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரபணு மற்றும் தடயவியல் சோதனைகள் மூலம், கூட்டு வன்கொடுமை நடைபெறவில்லை என்பதை சிபிஐ அதிகாரிகள் உறுதி செய்திருப்பதாகவும், சஞ்சய் ராய் ஒருவர் மட்டுமே இந்த குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணையில், இதுவரை வேறு யாருக்கும் தொடர்பிருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.