மகளிர் தினம் மலையகத்திற்கு நீண்டகால வரலாறு உள்ளது போல் மலையக பெண்களும் அதிகம் பேசப்படக் கூடியவர்களாகவே இருக்கின்றனர். இந்த வகையில் இ.தொ.கா மகளிர் பிரிவு 1970களில் ஆரம்பிக்கப்பட்டு இன்றோடு சுமார் 48 ஆண்டுகளைக் கடந்த நிலையில், அதன் வளர்ச்சி பண்மடங்காக அதிகரித்து இருப்பது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருமிதமடைவதாக அதன் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இ.தொ.கா வின் 48வது மகளிர் தினம் குறித்து விடுத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இன்றைய நாளில் மலையகப் பெண்கள் பற்றி பேசும் போது குடும்பம், சமூகம், அரசியல், விளையாட்டு, கல்வி, தொழில் என சகல துறைகளிலும் ஓரளவு காலூன்றியிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட மகளிர் பிரிவானது பெரியதொரு கட்டத்தை எட்டியிராவிட்டாலும் தற்போதைய நிலையில் 12 சதவீத வளர்ச்சியை கண்டிருப்பது வரவேற்கக் கூடியதொன்றாகும். எவ்வாறாயினும் எதிர்காலத்தில் மகளிர் பிரிவு விஸ்தரிக்கப்பட்டு, விரிவாக்கக் கூடிய வாய்ப்பை இ.தொ.கா ஏற்படுத்தும் என்பதில் திடமாக நம்பப்படுகிறது.
இந்த விழாவை சிறப்பாக கொண்டாடு முகமாக ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களோடு இ.தொ.கா வும் இணைந்து கொழும்பு புகையிரத நிலைய முன்றலில் இன்று காலை 9 மணிக்கு மகளிர் தின விழா நடைபெறும். இவ்விழாவில் இரத்தினபுரி, களுத்துறை, அவிசாவலை, எட்டியாந்தோட்டை, தெரனியாகலை, காலி போன்ற பிரதேசங்களிலிருந்து இ.தொ.கா பெண்கள் அணியினர் பங்கு கொள்ளவுள்ளர்.
இதேவேளை கொட்டகலை கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு இ.தொ.கா வின் 48வது மகளிர் தின விழா இ.தொ.கா தலைவரும், பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.
மலையகமெங்குமுள்ள ஆயிரக் கணக்கான மாதர் அணிகள் கண்டி, நாவலபிட்டி, ஹட்டன், மஸ்கெலிய, பொகவந்தலாவை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருந்திரளாக பங்கேற்கவுள்ளனர்.
மலையக பாரம்பரிய நிகழ்வுகளுடன் பெண்கள் சுலோகங்கள் ஏந்திய வண்ணம், தமது உரிமைக் குரலை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்