கொழும்பில் ஏழைத் தமிழ் மக்களை மிரட்டி பணிய வைக்க நான் இடம் கொடுக்க மாட்டேன்; அமைச்சர் மனோ ஆவேசம் !

0
127

கொழும்பு அளுத்மாவத வீதி 854ம் தோட்டத்தை அடுத்த காணியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலை உரிமையாளர்கள், கழிவு நீர் கால்வாயை சட்ட விரோதமாக அடைத்துள்ளமையினால், அப்பாவி குழந்தைகள் உட்பட ஏழை பாமர மக்கள் பல நாட்களாக அழுக்கு நீரில் மூழ்கியுள்ள வீடுகளில் பரிதவித்தனர். இது தொடர்பில் ஜனநாயக மகளிர் இணைய தலைவர் பானு சிவபிரகாசம், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் மகேஸ்வரன் ஆகியோர் அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனுக்கு அறிவித்துள்ளனர். இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, விபரங்களை கேட்டு தெரிந்துக்கொண்டார்.

இதையடுத்து, கொழும்பு மாநகரசபை முதன்மை பொறியியலாளர், மாநகரசபை வடகொழும்பு பிரதேச பொறியியலாளர், முகத்துவார பொலிஸ் பிரதான பொறுப்பதிகாரி, முகத்துவார பொலிஸ் சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி, வலய கிராமசேவகர் ஆகியோரை ஸ்தலத்துக்கு உடன் தருவித்த அமைச்சர் மனோ கணேசன் சட்டவிரோத கட்டுமானத்தை உடைத்தெறிய பணிப்புரை வழங்கினார்.
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியதாவது,

நாடெங்கும் டெங்கு தொல்லை தலைவிரித்து ஆடுகிறது. இந்நிலையில் பல நாட்களாக அழுக்கு நீரில் குழந்தைகள் உட்பட கொழும்பு நகர வாழ் மக்கள், இந்த தோட்டத்தில் வாழ்ந்துள்ளனர். இது பெரும் கொடுமை. தமிழ் பேசும் குறைந்த வருமான மற்றும் மத்திய வருமான பிரிவு மக்கள் வாழும் பகுதிகளில், தமது செல்வாக்குகளை பயன்படுத்தி, சட்ட விரோத கட்டுமானங்களை கட்டி, அழுக்கு மற்றும் மழைநீர் கான்களை அடைத்து, சிலர் கோலோச்சுகின்றனர். இதுவே இங்கே நடந்துள்ளது. இப்படி நம் மக்களை மிரட்டி பணியவைக்க எவருக்கும் நான் இடம் கொடுக்க மாட்டேன்.

ஒரு அமைச்சர் ஸ்தலத்துக்கு வந்து பார்வையிட்டு, அதிகாரிகளை அழைத்து, செய்ய வேண்டிய வேலையல்ல இதுவாகும். ஆனால், இந்த அமைச்சரவை அமைச்சர் அமைச்சரவைக்கும் போவார். பின்தங்கிய மக்கள் வாழும் தோட்டங்களுக்கும் வருவார். நான் அமைச்சர், எம்பி மட்டுமல்ல. இவற்றுக்கு மேலதிகமாக, வடகொழும்பு, மத்திய கொழும்பு தொகுதிகளை உள்ளடக்கிய கொழும்பு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் பதவியையும் வகிக்கின்றேன். இதை மக்களும், அதிகாரிகளும் அறிந்துக்கொள்ள வேண்டும்.
இதுபோல் கொழும்பில் அப்பாவி ஏழை மக்கள் வாழ்விடங்களை அண்மித்த காணிகளை, தம் செல்வாக்குகளை பயன்படுத்தி தனவந்தர்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களையும், சட்டவிரோதமாக கழிவுநீர், மழைநீர், சாக்கடை கான்கள் அடைக்கப்பட்டுள்ள இடங்களையும் அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். பொலிஸ் நிலையங்கள் தோறும் சுற்றுச்சூழல் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றுக்கு பொறுப்பாக பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பணிகளை நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here