கொவிட் தொற்றினால் சளிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வோர் விகிதம் குறைகிறது

0
27

கொவிட் தொற்று கிருமியின் அண்மைய திரிபு, சளிக்காய்ச்சல் ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைக் குறைவானோரே போட்டுக்கொள்வதால், இந்தக் குளிர்காலப் பருவத்தில் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் நுரையீரல் தொற்றுக்காக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அண்மைய வாரங்களில் அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் வயதானோர் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் முகக்கவசம் அணிவதை ஸ்பெயின் அரசாங்கம் மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது. அமெரிக்காவில் சில மருத்துவமனைகளும் இதேபோல் அறிவித்துள்ளன.

இதுகுறித்து உலகச் சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

“சளிக்காய்ச்சல், கொவிட்-19 ஆகியவற்றுக்காக மிக அதிகமானோருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. நம்மால் இதைத் தடுக்க முடியும்.இந்தப் பருவத்தில் உலகின் பல நாடுகளில் மிகக் குறைவானோரே சளிக்காய்ச்சலுக்கும் கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளனர் . 2023 மே மாதத்தில் உலகளாவிய பொதுச் சுகாதார நெருக்கடி முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு, கொவிட் கிருமித்தொற்றால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்தும் தடுப்பூசிகளின் நன்மை குறித்தும் மக்களுக்கு எடுத்துரைக்க அரசாங்கங்கள் போராடிவருகின்றன என்று வல்லுநர்களும் அதிகாரிகளும் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் பெரியவர்களில் 19 வீதமானோர் மட்டுமே இந்தப் பருவத்தில் கொவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டோரில் 44.9 வீதமானோர் சளிக்காய்ச்சலுக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

ஐரோப்பாவில் கொவிட்-19ஐவிட சளிக்காய்ச்சல்தான் அதிகம் பரவுகிறது. அங்கு கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வோர் விகிதம், கிருமிப்பரவல் காலகட்டத்தைவிடக் குறைவாக உள்ளது.

உலகெங்கும் 2023 டிசம்பரில், புதிதாக 850,000 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதியானது. அவர்களில் 118,000 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றனர்.

எக்ஸ்பிபி.1.5 கிருமித்திரிபுக்கான அண்மைய தடுப்பூசி, 65 வயதுக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டிய நிலையை 76.1 விழுக்காடு குறைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. சளிக்காய்ச்சலால் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறவேண்டிய நிலையை அதற்கான தடுப்பூசிகள் 52 வீதமாக குறைத்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here