கொஸ்கம வெடிப்பு : வதந்திகளுக்கு இடமளிக்க வேண்டாமென ஊடகங்களுக்கு கோரிக்கை!

0
120

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் வெளியாகும் வதந்திகளுக்கு ஊடகங்கள் இடமளிக்க கூடாது என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘வெளியேற்றப்பட்ட 7,763 குடும்பங்களில் 196 குடும்பங்களைச் சேர்ந்த 1120 பேர் மாத்திரமே முகாம்களில் இன்னமும் தங்கியுள்ளனர்.

வெடிவிபத்து ஏற்பட்ட முகாமிலிருந்து ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டத்தில் உள்ளவர்களைத் தவிர ஏனையவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இந்த விபத்தில் முழுமையாகப் பாதிக்கப்பட்ட மற்றும் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படுவதுடன், அவற்றை மீளக்கட்டிக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

வெடிப்புச் சம்பவம் ஏற்பட்ட பின்னர் ஜனாதிபதி பாதுகாப்பு சபையைக் கூட்டி ஆராய்ந்திருப்பதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதிக்கப்பட்ட இடத்துக்குச் சென்று வீடுகளைவிட்டு வெளியேறிய மக்களுடனும், அரசாங்க அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் நடத்தியிருந்ததுடன், வெளியேறிய மக்களுக்கு உடனடியான உதவிகளை வழங்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேலும், இப்பகுதியில் அனர்த்தம் ஏற்படுவதற்கான எச்சரிக்கை தோன்றியுள்ளதாக பல வதந்திகள் பரப்பப்படுகின்றன. இவ்வாறான வதந்திகளுக்கு ஊடகங்கள் இடமளிக்கக் கூடாது.

விபத்துச் சம்பவம் தொடர்பில் எந்தத் தகவல்களையும் அரசாங்கம் மறைக்கவில்லை.

இராணுவ முகாமில் ஆயுதக்களஞ்சியத்தில் இவ்வாறான பாரிய தீ விபத்து ஏற்பட்டது இலங்கைக்கோ அல்லது உலகத்துக்கோ இதுவே முதற்தடவையல்ல.

இவ்வாறான அனர்த்தங்களை எதிர்கொண்ட அனுபவம் கடந்தகாலத்தில் இருப்பதால் இதிலிருந்து மீள்வதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது’ எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here