கூட்டு எதிரணியின் உத்தேச பாதயாத்திரை ஒரு இனவாத யாத்திரை. மேலோட்டமாக அவர்களது கோஷங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றின் உண்மை அர்த்தங்கள் வேறானவை.
இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம், பிரிவினைவாதம், பயங்கரவாதம் ஆகியவையே அவர்களது உண்மை கோஷங்கள்.
இவற்றை சுமந்துக்கொண்டே அவர்கள் கண்டியில் இருந்து பாதயாத்திரை வர முயல்கிறார்கள்.
சிங்கள மக்களை உசுப்பிவிடவே இந்த இனவாத பாதயாத்திரையின் போது புதிய அரசியலமைப்பு முயற்சிகள், போர்குற்றங்கள் ஆகியவை தொடர்பில் கோஷங்கள் எழுப்பிக்கொண்டு கொழும்பை நோக்கி இவர்கள் வர முயல்கிறார்கள்.
இதை சிங்கள மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
இந்த இனவாத பாதயாத்திரை சிங்கள சகோதரர்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.
இனங்கள் மத்தியில் சகவாழ்வை உறுதிப்படுத்தி நாட்டை கடந்த காலபேரழிவில் இருந்து மீட்டு முன்னேறுவோமா அல்லது மீண்டும் கடந்த கால இனவாத பேரழிவுக்குள் விழுந்து நாட்டை அதலபாதாளத்துக்குள் தள்ளுவோமா என்பதை சிங்கள மகாஜனம் முடிவு செய்ய வேண்டும்.
இந்த இனவாத பாதயாத்திரையை நிராகரிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு நல்ல செய்தியை சிங்கள மக்கள் தர வேண்டும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பதுளை ஹாலி-எலவில், ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவினால் நேற்று நடத்தப்பட்ட ‘சகோதரத்தவ விளையாட்டு விழாவில்’ அதிதியாக கலந்துக்கொண்டு சிங்கள மொழியில் உரையாற்றியபோதே அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் மேலும் கூறியதாவது,
2005ம் வருடம் அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க மறுத்த, வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் 2015ம் வருடம் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து தாம் ஒரே நாடு என்ற நிலைபாட்டை ஏற்றுக்கொண்டு உள்ளதை பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.
நமது ஜனாதிபதி, நமது நாடு என்ற அடிப்படையில் இலங்கை தேர்தல் ஆணையாளர் நடத்திய தேர்தலில் பங்கு பற்றி வாக்களித்துள்ளார்கள்.
தாம் தனி ஒரு நாட்டை நாடவில்லை என்றும், போர் ஆயுதத்தைவிட, வாக்கு சீட்டு என்ற ஆயுதத்தை பயன்படுத்த நாம் தயார் என்றும் அவர்கள் கூறாமல் கூறியுள்ளார்கள்.
இந்த நல்ல சூழலுக்கு நாடு முழுக்க வாழும் தமிழ் மக்களை கொண்டுவர தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் முன்னின்று உழைத்துள்ளன. உங்கள் முன் நிற்கும் நான் பதினைந்து வருடங்களாக படாத பாடு பட்டு, நிறைய இழப்புகளை சந்தித்து, தமிழ், சிங்கள, முஸ்லிம் சகவாழ்வுக்காக பாடுபட்டுள்ளேன். இதைவிட வேறென்ன நல்ல செய்தி தமிழ் மக்களிடம் இருந்து, தமிழ் அரசியல் தலைமைகளிடம் இருந்து சிங்கள மக்களுக்கு வேண்டும் என நான் உங்களை கேட்கிறேன்.
தமிழ் மக்களை மனம் வெறுக்க செய்து விடாதீர்கள் என்றும், எங்களை ஏமாற்றிவிடாதீர்கள் என்றும் நான் இந்த மேடையில் இருந்து கோருகிறேன்.
இனவாத பாதயாத்திரை நடத்த நினைக்கும் மகிந்த ராஜபக்ச குழுவினரை நிராகரித்து எங்கள் கரங்களை பலப்படுத்த வேண்டிய கடமை சிங்கள சகோதரர்களுக்கு இருக்கிறது.
இங்கே நண்பர் டிலான் பெரேரா, ‘சகோதரத்தவ விளையாட்டு விழா’ நடத்தி நல்ல காரியம் செய்துள்ளார். இது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. ஏனெனில் டிலான், எந்த அணியில் இருந்தாலும் எப்போதும், இனவாதத்துக்கு எதிராகவே இருந்துள்ளார்.
ரவிராஜையும், லசந்தவையும் கொன்று, என்னை கொல்ல முயற்சிகள் செய்யப்பட்ட போது எனக்கு பல உதவிகளை, இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செய்தவர், டிலான் பெரேரா.
இந்த உண்மையை இங்கே, டிலாலின் தொகுதியில் வைத்து பகிரங்கமாக கூறாவிட்டால் நான் நன்றி கொன்றவன் ஆகிவிடுவேன்.
சிங்கள இனவாதிகளுக்கு என் மீது கோபம். தமிழ் தரப்பில் இருக்கும் சில இனவாதிகளுக்கும் என்மீது கோபம் இருக்கிறது. இவை பற்றி நான் அலட்டிக்கொள்வதில்லை.
எனக்கு சரியென படுவதை நான் எப்போதும் செய்து வந்துள்ளேன். இனியும் அப்படித்தான் இருப்பேன்.
இன்று இங்கே இந்த விளையாட்டு விழாவில் குழுமியுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, டிலானுடன் கரங்கோர்த்து, பதுளையில் இருந்து கொழும்புக்கு சகவாழ்வு பாதயாத்திரை செல்ல எனக்கு விருப்பமாக இருக்கிறது.
சகவாழ்வுதான் எங்கள் எதிர்காலம். இது குழப்ப முயல வேண்டாம் என கோருகிறேன்.