“சஜித் மலையக மக்களுக்கு நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதிகளையே வழங்குகிறார்.” நாவலபிட்டிய பிரசார கூட்டத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார்
கடந்த பல வருடங்களாக, மலையக பெருந்தோட்ட மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். தோட்ட பிரதேசங்களில் வறுமை நிலை உயர்வடைந்துக்கொண்டே செல்கின்றது. இவ்வாறான சூழலில், மக்கள் எதிர்நோக்கும் நாளாந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு முன்வைக்க வேண்டியுள்ளது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாச, மலையக மக்களுக்கு நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதிகளையே வழங்குகின்றார்.
இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வேலைத்திட்டம் தேவை. அதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஸ்வசும நிவாரண கொடுப்பனவை மேலும் மலையக பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதற்கு முன்வந்துள்ளார். ஆனால் சஜித் பிரேமதாச உடனடியாக நிறைவேற்ற முடியாத சிறு தோட்ட உடமை பற்றி பேசுகின்றார். அதனை செய்வதற்குரிய ஒரு வேலைத்திட்டமும் அவர்களிடம் இல்லை. மாறாக 49 அம்ச ஒப்பந்தம் என்கின்றார்கள். இவை எல்லாம் தேர்தல் கால மூடி மறைப்புகள். அதனை விடுத்து இன்று எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைக்கான தீர்வை சொல்ல வேண்டும். குறைந்த பட்சம் தற்போதுள்ள சம்பள அதிகரிப்பு குறைவென்கின்றார்கள், அவ்வாறாயின் அவர்கள் வழங்க முற்படும் சம்பள அளவை கூற வேண்டும். அதனை எவ்வாறு வழங்கப்போகின்றார்கள் என்ற திட்டத்தையும் கூற வேண்டும். ஆனால் ஒருபோதும் அது பற்றி பேச மாட்டார்கள். ஏனினில் அவர்களிடம் வேலைத்திட்டம் ஒன்று இல்லை.