ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல. மாறாக அவரது மனைவி, சகோதரி உள்ளிட்ட பிரேமதாசவின் குடும்ப உறுப்பினர்களே என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”குடும்ப ஆட்சி என்பது ஒரு நாட்டுக்கு சாபக்கேடு. குடும்ப ஆட்சியில் எந்த நாடும் வளர்ச்சி அடையவில்லை. குடும்ப ஆட்சி பற்றி பேசும் போது அனைவரும் ராஜபக்ச குடும்ப ஆட்சி பற்றி பேசுகிறார்கள். ஆனால் பிரேமதாச குடும்ப ஆட்சி பற்றி பேசப்படுவது குறைவாகவே உள்ளது.
2015-2019 காலப்பகுதியில், சஜித் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது, அமைச்சர் சஜித் வீடமைப்பு அமைச்சில் அதிகம் செயற்படவில்லை. அவரது மனைவி ஜலனி பிரேமதாசா (Jalani Premadasa) தான் செயற்பட்டார்.இன்று ஐக்கிய மக்கள் சக்தி (SJB) குடும்ப ஆட்சியின் கீழ் மட்டுமே உள்ளது. கட்சியை ஓட வைப்பது சஜித் பிரேமதாச அல்ல. அவரது மனைவி ஜலனி பிரேமதாச மற்றும் தொழிலதிபர் லக்ஷ்மன் பொன்சேகாவும் (Lakshman Fonseka).
இப்போது சஜித்தின் சகோதரி வேலையில் இறங்கி விட்டார். நான் பொய் சொல்கிறேன் என்றால், இதைப் பற்றி ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுப் பாருங்கள். இந்த குடும்ப ஆட்சியால் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
அது சாத்தியமற்றதாக இருந்தாலும் சஜித் வெற்றி பெற்றால் அவரும் அவரது குடும்பத்தாரும் நாட்டை ஆளுவார்கள். சஜித்தின் அரசின் அமைச்சர்கள் வெருளிகளாக இருப்பார்கள்.
மேலும், அனுரகுமார (Anura Kumara Dissanayake) வெற்றி பெற்றாலும் நாட்டை மீண்டும் கற்காலத்திற்கு கொண்டு செல்வார். லால்காந்தவின் (Lalkantha) கதைகளை கேட்கும் போது அவர் சுயநினைவின்றி பேசுவதாகவே உணர்கிறோம். தேசிய மக்கள் சக்தியில் இரத்தவெறி பிடித்த அறிவிலிகளை வைத்து எப்படி நாட்டை ஆட்சி செய்வது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குடும்ப ஆட்சியை நிராகரித்த ஜனநாயக தலைவர். ஜனாதிபதியின் மனைவி ஒரு கூட்டத்தில் கூட இல்லை. விக்ரமசிங்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்கள் என்ற வகையில் எங்களின் பணிகளில் தலையிடுவதில்லை.
ரணில் விக்ரமசிங்க உண்மையான ஜனநாயக பண்புகளை கொண்ட தலைவர். அவர் அரசியல்வாதிகளாகிய எங்களால் நீண்ட காலமாக தவறவிடப்பட்ட ஒரு அரசியல் தலைவர்.ஒரு நாட்டை எவ்வாறு தேசிய நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பது என்பதை இரண்டு தலைவர்கள் செயலில் நிரூபித்துள்ளனர், ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa).
இன்றைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் ஜனாதிபதி இருக்கும் பாதையை விட்டால், நாம் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல வேண்டியிருக்கும்.
எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக நீங்கள் இம்முறை புத்திசாலித்தனமாக எரிவாயு சிலிண்டருக்கு முன்னால் வாக்களியுங்கள். அதுவே இந்த நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாம் செய்யும் மிகப்பெரிய முதலீடாகும்.“ என தெரிவித்துள்ளார்.