கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பிட்டிய மாதென்ன பகுதியில் வைத்து சட்டவிரோதமாக இயங்கிவந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கசிப்புகளும், அதனை உற்பத்தி செய்ய பயன்படுத்திய உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.குறித்த சுற்றிவளைப்பின் போது கசிப்பு இஸ்பிரிட் 16000 மில்லிலீற்றர், மற்றும் அதனை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்திய கசிப்பு வகை 185000 மில்லிலீற்றரும் கைப்பற்றப்படுள்ளதாக அட்டன் மது வரித் திணைக்கள அத்தியட்சர் டி.எம்.திலகரத்ண தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகாமையில் பொல்பிட்டிய மாதென்ன பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் இவ்வாறு இயங்கிவந்துள்ளது.
இதனையடுத்து மதுவரித் திணைக்கள உத்தியோகத்தரொருவருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அட்டன் மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் டி.எம்.திலகரத்ண குழுவினர் இவ் இடத்தை சுற்றிவளைத்து கசிப்பையும் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்படட சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்துள்ளதுடன், எதிர்வரும் 18ம் திகதி அட்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோதமான முறையில் கசிப்பு வடிக்கும் இடங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திருந்தால் உடனடியாக தகவல்களை அட்டன் மது வரி திணைக்களத்திற்கு அறியத்தரவும் என அட்டன் மது வரித் திணைக்கள அத்தியட்சர் டி.எம்.திலகரத்ண மேலும் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)