” நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியும், அதனை வென்றெடுக்க முடியாத வக்கற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்றனர்.” – என்று மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.
அத்துடன், மட்டக்களப்பில் இருந்து வந்ததால் தான் சாணக்கியனுக்கு மல்லியப்பு சந்தி எது, அட்டன் அம்பிகா சந்தி எது என தெரியாமல் போய் உள்ளது எனவும் திலகர் கூறினார்.
நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயம் தொடர்பில் அட்டன், மல்லியப்பு சந்தியில் நேற்று (06.03.2022) முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் மேலும் கூறியவை வருமாறு,
” நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காட்டப்படும் பாரட்சத்துக்கு எதிராக நாடு முழுவதும் கையெழுத்து திரட்டி வருகின்றோம்.
அன்றாடம் கோஷம் எழுப்பும் அரசியல் எமக்கு தேவையில்லை. உரிமை அரசியலே எமக்கு முக்கியம். பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே நுவரெலியா மாவட்டத்தின் தேவை. அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது. அதனைக்கூட கேட்டுபெற முடியாத – கதிரைகளை மட்டும் சூடாக்கிக்கொண்டிருக்கும் வக்கற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே இங்கிருக்கின்றனர். இவர்களால் குரல் எழுப்ப முடியவில்லை. நாம் நாடு முழுவதும் சென்று கையெழுத்து திரட்டுகின்றோம். எமது மக்களை தலைகுனிய இடமளிக்கமாட்டோம். அதிகாரப்பகிர்வு என்பது மலையகத்துக்கும் அவசியம்.
இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களில் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பிரதேச செயலகங்கள் அதிகரித்துள்ளன. நுவரெலியாவுக்கு அதனை பெற்றுக்கொடுக்க முடியாத வக்கற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களெ இங்கிருக்கின்றனர்.
அதேவேளை, மல்லியப்பு சந்தியில் கூட்டம் நடத்துமாறு சாணக்கியனே எங்களிடம் கேட்டுக்கொண்டார். மட்டக்களப்பில் இருந்து வந்த அவருக்கு மல்லியப்பு சந்தி எது, அட்டன் அம்பிகா சந்தி எது என தெரியாமல்போனது, அவரின் குறைபாடே தவிர, எமது குறைப்பாடு அல்ல. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதற்கு நாம் ஆதரவு. இலங்கை முழுவதும் செல்வதற்கான தைரியம் எமக்கு இருக்கின்றது.” – என்றார்.
க.கிஷாந்தன்