சனத் நிஷாந்தவின் மனைவி அரசியலுக்கு.. மக்கள் ஆணைக்காக காத்திருப்பு

0
21

தமக்கு அரசியலில் பிரவேசிக்கும் நம்பிக்கை இல்லையென்றாலும், தனது கணவரால் காலியான அரசியல் தலைமைப் பதவியை ஏற்குமாறு புத்தளம் மக்களும் கட்சியும் தம்மிடம் கோரிக்கை விடுத்தால், எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி தெரிவித்துள்ளார்.

அண்மையில் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிஸ் சார்ஜன்ட் அநுராத ஜயக்கொடியின் வீட்டுக்குச் சென்ற சட்டத்தரணி சாமரி பிரியங்கா பெரேரா குடும்பத்தினரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய பின்னரே ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சாமரி பிரியங்கா பெரேரா;

“புத்தளம் மாவட்டத்துக்கும் நாட்டு மக்களுக்கும் அளப்பரிய சேவையாற்றியவர் என்கணவர்.. அவரிடம் அடைக்கலம் தேடி வந்த எவரும் வெறுங்கையுடன் திரும்பியதில்லை. அவருக்கு நேர்ந்த விபத்தை என்னால் நம்ப முடியவில்லை. கனவில் பார்ப்பது போல் இருந்தது. சில ஊடகங்கள் எனது கணவரின் மரணத்தின் சூடு தனிய முன்னரே சில ஊடகங்கள் நான் அரசியலுக்கு வருவதாக தெரிவித்தன. அப்படியான செய்திகளை வெளியிடவோ அது குறித்த கருத்தினையோ யாரும் என்னிடம் கேட்கவில்லை. நான் அரசியலுக்கு வருகிறேன் என்று இதுவரை எந்த ஊடகத்திலும் அறிக்கைவிடவுமில்லை. .

அவருடைய அரசியல் விவகாரங்களை கொஞ்சம் சமாளித்து, அவருடைய தனிப்பட்ட செயலாளராக செயல்பட்டாலும், ஒருபோதும் அரசியலுக்கு வருவேன் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்ததில்லை. இன்னும் அந்த நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் விட்டுச் சென்ற இடத்தை கையகப்படுத்தி மக்கள் பணியை முன்னெடுத்துச் செல்லுமாறு புத்தளம் மக்களும், நாட்டு மக்களும், கட்சித் தலைமையும் என்னைக் கேட்டால், அதுபற்றி நான் சிந்திக்க வேண்டி வரலாம். எனது நான்கு குழந்தைகளின் எதிர்காலத்திற்கான மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இப்போது உள்ளது.

எனக்கு நல்ல வேலையும் நல்ல தன்னம்பிக்கையும் இருக்கிறது. நான் தனியாக இல்லை என்ற உணர்வுடன் எதிர்காலத்தை எதிர்கொள்கிறேன். நான் அரசியலுக்கு வந்தாலும் என் கணவர் செய்த அரசியலை நான் செய்ய வேண்டியதில்லை. சிலர் அவரை விமர்சித்தாலும், அவர் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு அரசியல்வாதி. பெரும்பாலான நாட்களில் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தவர். என் கணவரைச் சுற்றி நிறைய பேர் இருந்தார்கள். அதுதான் அவருடைய பலம். எனது கணவர் புத்தளம் மாவட்டத்தில் அதிகளவான மக்களுக்கு காணிகளை வழங்கி வீடுகளை கட்டி கொடுத்தார். வீடற்றவர்களுக்கு 10,000-15,000 வீடுகளைக் கட்டிக் கொடுத்த எனது கணவருக்கு இறுதியில் அவரது உடலை வைக்கக் கூட வீடு இல்லாது போனது துரதிஷ்டமானது. இறுதியில், தற்காலிகமாக கட்டப்பட்ட இடத்தில் இறுதிச் சடங்குகள் கூட செய்ய வேண்டியிருந்தது.

புத்தளம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்புகளுக்கு நான் தலைமை தாங்குகிறேன். பெண்களின் வலி எனக்குத் தெரியும். இன்று இச்சம்பவத்தினால் நானும் பொலிஸ் சார்ஜன்ட் அநுராதவின் மனைவி லக்சிகா பிரசாதினியும் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். நான் அவளுக்கும் சார்ஜென்ட் ஜெயக்கொடியின் மகனுக்கும் என்ன தேவையோ அதை செய்வேன்.. அவர்களை தனியாக கைவிட மாட்டேன்..” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here