மலையக அரசியல் தலைவர்களையும்,மலையக அரசியல் கலாசாரத்தையும் முழுமையாக வெறுத்தொதுக்கும் நிலையில் எமது இளைஞர் யுவதிகள் தள்ளப்பட்டிருப்பது நமது சமூக மாற்றத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்று ஊவா மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் நிர்வாக செயலாளருமான வேலாயுதம் ருத்திர தீபன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…
சமூக வலைத்தளங்களிலும் இளைஞர் யுவதிகளின் மனதிலும் இன்றைய மலையக அரசியல் என்பது சாக்கடையாக்கப்பட்டுள்ளது.இதற்கு சமூகத்தின் நிலைப்பாடும் மக்களின் பொருளாதாரமுமே காரணமாக அமைந்தாலும் நம்முடைய எண்ணப்பாடும் ஒரு வகையில் காரணமாகிவிட்டது.
குறை கூறுவதும் விமர்சனம் செய்வதும்,வதந்திகளை நம்புவதும் பரப்புவதுமே இளைஞர் யுவதிகளின் அடையாளமாகிவிட கூடாது.
95 சதவீதமான மலையக இளைஞர் யுவதிகள் ஏதோ ஒரு அரசியல் தலைவரை கட்சியை தொழிற்சங்கத்தை தினமும் குறை கூறிக் கொண்டே இருப்பது இப்போது வாடிக்கையாகி விட்டது.
ஆனால் எத்தனை இளைஞர்கள்
இந்த சமூக நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்…….
புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும்…..
தீர்மானம் எடுக்கும் துறைக்கு அடிப்படை பிரச்சனைகளை நேரடியாக சந்தித்தவர்கள் வர வேண்டும்….
மலையக பெண்களின் அடையாளத்தை மாற்றி அரசியல் அங்கீகாரத்தையுடைய தலைமைத்துவத்தை தொட வேண்டும்……
விளம்பர,விமர்சன அரசியலை இல்லாமல் செய்து ஆளுமைமிக்க அரசியல் தளத்தை கட்டியெழுப்ப வேண்டும்….
என புறப்படுகிறார்கள் என்றால் அது கேள்விக்குறிதான்.
அப்படியாயின் விமர்சனங்களையும் விரக்தியையும் வெளிப்படுத்தி என்ன கிடைக்க போகிறது.
மலையக இளைஞர்களின் இன்றைய அரசியல் புரட்சி வரவேற்கதக்கதுதான் ஆனால் புரட்சிக்கப்பால் அதற்கான தீர்வு என்ன என்பதற்கு எவரிடமும் பதில் இல்லாததுதான் வேதனைக்குரியது.
நானும் மலையக மக்களின் 30 ஆயிரம் வாக்குகளை பெற்ற மக்கள் பிரதிநிதிதான் என்னுடைய அரசியல் போக்கு எவ்வாறான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்பது குறித்த அவ்வப்போது நானே சுயவிமர்சனம் செய்து கொள்கிறேன்.10 சதவீதம் தான் என் அரசியல் வாக்குறுதிகள் நிறைவேறி இருக்கிறது.நிச்சயமாக என்னால் பாரிய மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் உருவாக்க முடியும் எனவும் நம்பிக்கையுண்டு.
நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையுணர்வு முதலில் இளைஞர் யுவதிகளுக்கு தோன்ற வேண்டும்.
இதே போன்று மலையக பாடசாலை மாணவர்கள் பாடசாலை முடித்த மாணவர்கள் போதை வஸ்த்துக்களுக்கு அடியாகி வருவதான செய்திகள் தற்போது அதிமாகி விட்டது.இவ்வாறான ஆரம்பம் தான் நாம் கூலிகளாக வந்து கூலிகளாகவே வாழ்க்கை சக்கரத்தை சுழற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றோம்.
மலையக யுவதிகள் அடுத்தக்கட்டத்திற்கு செல்வதற்கான முயற்சியின்றி திருமணத்துடனயே இலட்சியங்களையும் ஆசைகளையும் பூட்டி வைத்து விடுகின்றார்கள்.மலையக பெண்கள் ஆழுமையும் சக்தியும் உடையவர்கள்.அத்தனை கஸ்டத்திலும் சகல பக்கங்களிலும் தமது கடமைகளை சரிவர செய்பவர்கள்.தம்மை அரசியலிலும் அடையாளப்படுத்திக் கொண்டால் பாரிய மாற்றத்தை நமது சமூகம் உணரும்.
நம்மால் இந்த வேகத்திலும் இந்த பாதையிலும் சென்று மாற்று சமூகத்தினரின் நிலையையோ,கௌரவமான வாழக்கையையோ பெற்றுக் கொள்வது சுலபமல்ல என்பது வெளிப்டையாகிறது.
அன்பிற்குரிய இளைஞர் யுவதிகளே ஒன்றரை நூற்றாண்டுகள் நாம் கடினமானதும் கொடுமையானதுமான பாதையில் வந்தே இந் நிலையடைந்திருக்கிறோம் வெறுமனே சமூக வலைத்தளங்களில் எழுதுவதால் கோபப்படுவதால் மாத்திரமே சமூக மாற்றத்தை அனுபவிக்க முடியாது மாறாக களத்தில் இறங்க வேண்டும்.
அவர் வருவார் இவர் வருவார் என அடுத்தவர்களையே எத்தனை நாள் தான் எதிர்பார்ப்பது.ஒவ்வோரு மலையக இளைஞர் யுவதிகளும் நான்தான் இந்த மாற்றத்தை உருவாக்கி மலையகத்தை கௌரவமான நிலைக்கு உயர்த்த வேண்டுமென்டுமென கருத வேண்டும்.
தேசிய அரசிலையையே ஓரு நிமிடம் கலங்க வைத்தது கடந்த ஊவா மாகாண சபை தேர்தல் என்பதை மறந்து விடாதீர்கள்,
ஆகவே உள்ளுராட்சி தேர்தலை சிறிய விடயமாக எண்ணாமல் பாரிய மாற்றத்திற்கான அழைப்பாக கருதி நாம் தேசிய அரசாங்கத்தையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு செயற்படுவது தான் காலத்தின் தேவையாகும்.
கட்சி தொழிற்சங்க பேதமின்றி சமூக அரசியலுக்கான அழைப்பாக இதனை பார்வையிடுங்கள்.நிச்சயமாக ஆழ்மனதில் மகிழ்ச்சியோடு கூறிக் கொள்கின்றேன் மலையகத்திலிருந்து எத்தனை புதிய தலைவர்கள் உருவானாலும் முதலில் பெருமைப்படுவது நானாகத்தான் இருக்கு முடியம்.
மலையக மாற்றத்திற்கு அரசியல் ஆயுதத்தை இளைஞர்கள் ஏந்துவது காலத்தின் தேவை என்பது எனது நிலைப்பாடு .
வளர்க மலையகம்.