திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வருடம் சம்பள அதிகரிப்புக் கோரி கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் 30 பேர் சந்தேகத்தின் பேரில் இன்று 15 ஆம் திகதி பத்தனை பொலிஸாரால் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து சந்தேக நபர்கள் 30 பேரும் தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டதோடு சந்தேக நபர்களை எதிர்வரும் ஜுன் மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜாராகுமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதியும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியும் கொட்டகலை மற்றும் பத்தனை பிரதேசங்களில் தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட போது, ஹட்டன் – நுவரெலியா பிரதான பாதையை வழிமறித்து வாகன போக்குவரத்து மற்றும் ஏனையவர்களுக்கு இடையூறாக செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 30 பேரை ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
இவ்வாறு ஆஜர்படுத்தப்பட்டவர்களில் லொக்கில் , டிரைட்டன் , கிறிஸ்டல்பார்ம் , திம்புள்ள, மவுண்ட்வேர்ணன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சகல தொழிற்சங்கங்களையும் சேர்ந்தவர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், மலையக தொழிலாளர் முன்னணியின் உபதலைவர் ஆர்.சந்திரமணி , தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேச அமைப்பாளர்களான லெட்சுமணன், ஜெஸ்டின் உட்பட தொழிற்சங்க முக்கியஸ்தர்கள் ஹட்டன் நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்திருந்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்