சம்பள உயர்வு தொடர்பில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. இந்த சம்பள உயர்வு சமரில் வெற்றிபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்டவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்று இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
அடிப்படை நாள் சம்பளம் 35 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு ஆயிரத்து 350 ரூபா கிடைக்கப்பெறும் நிலையில், எஞ்சிய 350 ரூபா கொடுப்பனவையும் கூடியவிரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் எமது தொழிலாளர்களுக்கு 70 சதவீத சம்பள உயர்வு கிடைக்கப்பெறும் எனவும் அவர் கூறினார்.
சம்பள விடயம் தொடர்பில் 10.09.2024 அன்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நல்லாட்சி காலத்தில் எமது தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவைகூட பெற்றுக்கொடுக்க முடியாமல் இருந்த அரசியல் தலைவர்கள், இன்று போலி வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றனர். தேர்தலில் தோல்வி உறுதி என்பதால்தான் பொய் வாக்குறுதிகளை வழங்கியாவது வெற்றி பெறலாம் என முயற்சிக்கின்றனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியையும் நாம் நிறைவேற்றினோம். தற்போது அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 350 ரூபாவையும் பெற்றுக்கொடுத்துள்ளோம். மேலதிக கொடுப்பனவான 350 ரூபாவையும் விரைவில் பெற்றுக்கொடுத்து நாளொன்றுக்கு 1,700 ரூபா கிடைப்பதற்கு வழிவகுக்கப்படும்.
எமது மக்களுக்கு காணி உரிமை வேண்டுமென எமது அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதியிடம் கேட்டார், அதனை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோட்டங்களை கிராமங்களாக்கி தொழிலாளர்களுக்கு உள்ள தடைகளை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம்கூட முன்வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்ற பிறகு எமது அமைச்சர் தலைமையில் எமது தொழிலாளர்களை சிறுதோட்ட பங்குதாரர்களாக மாற்றும் திட்டமும் உள்ளது. அது உரிய வகையில் செயற்படுத்தப்படும். ஏனையோர்போல் பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்படமாட்டாது.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலானது நாட்டில் எதிர்காலத்தை மட்டுமல்ல மலையக எதிர்காலத்தையும் நிர்ணயிக்கப்போகும் தேர்தலாகும். எனவே, ஜனாதிபதிக்கு வாக்களித்து நாட்டையும் முன்னேற்றி, நாமும் முன்னேறுவோம்.” – என்றார்.
(க.கிஷாந்தன்)