சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடர்: தொடரும் இந்தியா – பாகிஸ்தான் மோதல்

0
42

பாகிஸ்தானில் (Pakistan) நடைபெற உள்ள சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடரில் பங்கேற்க இந்திய அணி அந்த நாட்டுக்கு செல்ல இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை என பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்துள்ளது.

2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

இந்தத் தொடரில் இந்தியா (India) உட்பட எட்டு முக்கிய நாடுகள் பங்கேற்க உள்ளன.கடந்த 17 ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதில்லை.

2008ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பாகிஸ்தான் பயணித்து எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அதேபோல் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களிலும் இந்தியா – பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதவில்லை.

ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

எனவே, இந்திய அணி இப்போதும் பாகிஸ்தானுக்கு செல்லாது என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது.

நவம்பர் 11 அன்று சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான போட்டி அட்டவணையை இறுதி செய்ய வேண்டிய நாள் என்பதால் அதற்கு முன் பிசிசிஐ தங்களது முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்துள்ளது.அதே சமயம் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பிசிசிஐ எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் அது அதிகாரப்பூர்வமாக, எழுத்துப்பூர்வமாக தங்களுக்கு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா, பாகிஸ்தானுக்கு வராவிட்டாலும் இந்தியா ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நாங்கள் நடத்த மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானில் நடந்த 2023 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வராதபோதும், அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற 2023 ஒருநாள் கோப்பை உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

சில வாரங்களுக்கு முன்பாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார். இந்த பயணத்திற்கு பின்னரும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here