சிங்கப்பூரின் மூத்த பொருளாதாரக் கொள்கை வகுப்பாளரான தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரில் செப்டம்பர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக அவர் தனது அமைச்சர் பதவியையும் இராஜினாமா செய்வதாக, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு வியாழன் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சிங்கபூரில் அதிபர் ஹலிமா யாக்கோப் பதவிகாலம் வருகின்ற செப்டம்பர் 13 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
இதன்போது, அவர் கடந்த மே 29 ஆம் திகதி , அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே, மக்கள் செயல் கட்சியின் மூத்த அமைச்சரான சண்முகரத்தினம், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழரான இவர், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சி அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புக்களில் இருந்த விலகுவதாக அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கிற்க்கு கடிதமொன்றை சமர்பித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் லீ சியன் லூங் கூறுகையில்,“தர்மன் விலகல் கட்சிக்கும், அமைச்சரவைக்கும் மிகப்பெரிய இழப்பு என வலியுறுத்தியுள்ளார்.
இதுவரைகாலமும், இவர் துணைப்பிரதமர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் பொருளியல் பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்ற அவர் பிரதமருக்கு பொருளியல் கொள்கைகள் குறித்து ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்