சிங்கமலை காட்டுப்பகுதியில் இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் பாதுகாப்பு வனப்பிரதேசம் அழிவுக்கு உள்ளாகியிருப்பதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என பலர் எச்சரித்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எட்லி தோட்டப்பகுதியில் உள்ள சிங்கமலை வனப்பிரதேசத்தில் நேற்று 09.03.2025 இரவு சுமார் 7.00 மணியளவில் இனந்தெரியாத விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பல ஏக்கர் வளமான வனப்பிரதேசம் அழிவுக்குள்ளாகியிருப்பதாகவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த தீ காரணமாக அரியவகை தாவரங்கள் எமது நாட்டுக்கே உரிதான மருந்து மற்றும் உயிரினங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என பலர் அச்சம் வெளியிடுகின்றனர்.
குறித்த பகுதியிலிருந்து ஹட்டன் பகுதிக்கு பிரதேசத்திற்கு குடிநீர் பெற்றுக்கொடுக்கும் பிரதான நீர் மூலம் அமைந்திருப்பதால் எதிர்காலத்தில் நீர் ஊற்றுக்கள் வற்றிப்போய் பாரிய நீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் வரட்சி காலங்களில் பல்வேறு பகுதிகளில் தீ வைப்பது வாடிக்கையாகி விட்டன.ஹட்டன் வட்டவளை, கினிகத்தேனை, பத்தனை, தலவாக்கலை, பொகவந்தலாவை, நோர்வூட், மஸ்கெலியா ,நல்லதண்ணீர்,உள்ளிட்ட பொலிஸ் பிரதேசங்களிலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மிருகங்களை வேட்டையாடுவதற்கும்,மழைவரும் என்ற மூட நம்பிக்கை காரணமாகவும்,விறகு சேகரிப்பதற்காகவும் சிலர் பொழுது போக்குக்காகவும் காடுகளுக்கு தீ வைப்பதாக சிலர் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.
எனவே காடுகளுக்கு தீ வைப்பதனால் ஏற்படும் பேரழிவினை தடுப்பதற்கு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் அவர்கள் உடன் கைது செய்து சட்டத்தின் மூன் நிறுத்த வேண்டும் எனவும் பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அதே நேரம் காடுகளுக்கு தீ வைக்கப்படும் பிரதேசங்களை தெரிவு செய்து ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அழிவு தொடர்பாக பொறுப்புள்ள அதிகாரிகள் சூழல் தொடர்பாக செயப்படும் அமைப்புக்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் பொது அமைப்புக்கள் இணைந்து செயப்படுவதன் மூலம் இவ்வாறான சம்பவங்கள் குறைத்து கொள்ளலாம் என புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எது எவ்வாறான போதிலும் தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள காலநிலையினையும் நீர் பற்றாக்குறையினையும் கருத்தில் கொண்டு செயப்படுவது காலத்தின் கட்டாயமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்