சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அணிதிரள வேண்டும்; அமைச்சர் திகா நோன்பு வாழ்த்து!

0
119

சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தமிழ் முஸ்லிம் சிறுபான்மை
இனங்கள் தமது கருத்து வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
அதுவே, இன்று காலத்தின் தேவையாக இருக்கின்றது என தொழிலாளர் தேசிய
சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள்
மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள
வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தமது செய்தியில்,

கடந்த ஒரு மாத காலமாக இஸ்லாமிய சகோதரர்கள் மேற்கொண்டு வந்த நோன்பு
நிறைவு பெற்று இன்று பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எமது சங்கத்தின்
சார்பிலும், அமைச்சின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். “கண்டு பிடி, கண்டு விடு” என்பதற்கு இணங்க
பிறை கண்டு நோன்பு பிடித்து, அதேபோல் பிறை தென்பட்ட பிறகு நோன்பு துறந்து
பெருநாளைக் கொண்டாடுகின்றார்கள். தாங்கள் பெருநாளைக் கொண்டாடுவதோடு
மாத்திரம் நின்று விடாமல் தம்மால் முடிந்த வரை ஏழை எளியவர்களுக்கும்
கொடுத்து உதவி அவர்களின் பசியையும் தீர்த்து வைக்கும் உன்னத திருநாளாக
நோன்புப் பெருநாள் திகழ்கின்றது. நோன்பு காலத்தில் மிகவும்
கட்டுப்பாட்டுடன் இருந்து சமய அனுஷ்டானங்களைப் பின்பற்றி வந்ததைப் போல
தமது வாழ்க்கையிலும் ஒற்றுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டியது
அவசியமாகும்.

இன்று சிறுபான்மை மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க
வேண்டிய நிலையில் உள்ளார்கள். அவர்களுக்கு இடையூறு விளைவிப்பதையே
நோக்கமாகக் கொண்டு சில இனவாதிகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள்.
குறிப்பாக முஸ்லிம் வணக்கஸ்தலங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி
வருகின்றார்கள். அவற்றை முடியடிக்க சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒற்றுமை
நிலவ வேண்டியது அவசியமாகும்.

இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளைக் கொடுக்கக் கூடாது
என்று இனவாதிகள் குரல்கொடுத்து வருகின்ற நேரத்தில் எமது மத்தியில்
ஒற்றுமை காணப்படா விட்டால் அது அவர்களுக்கு வாய்ப்பாகப் போய்விடும்.
எனவே, நாம் எமது ஒற்றுமைபயைப் பயன்படுத்தி சமூகத்தை மேம்படுத்துவோம்:
அதற்காக ஒன்றிணைவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here